”வடக்கு முஸ்லிம்களை வேற்றுக் கிரக வாசிகளாக விரட்டித்திரியும் வல்லூறுகள்”

வட மாகாண மீள் குடியேற்றத்தில் முஸ்லிம்களின் பங்குகள் புறக்கணிக்கப் படுவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அமைச்சர் ரிஷாட், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக்கூறும் சில தமிழ் எம்.பிக்களின் செயற்பாடுகள் இன ஒடுக்கு முறைக்கு வித்திடுவதாக கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பிரதமரின் அண்மைய வடக்கு விஜயத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாண கச்சேரியில் நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலே மக்கள் காங்கிரஸ் தலைமை இது தொடர்பில் கடுமையான தொனியில் பேசியுள்ளது.

விரட்டப்பட்ட சமூகத்தின் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் மக்கள் காங்கிரஸின் தலைமை வடபுல முஸ்லிம்களின் விடயங்களில் இனிமேலும் விட்டுக் கொடுப்புடன் செயற்படாது என்பதன் எதிரொலிகளாகவே இவற்றை நோக்க வேண்டியுள்ளன.

தனது மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்தும் அரிய சந்தர்ப்பம் அமைச்சர் ரிஷாட்டுக்கு 2009 ஆம் ஆண்டு கிடைத்திருந்தது. எனினும் நாட்டில் அன்றிருந்த சூழலால் மெனிக்பார்மில் அடைக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திலே அதிக கவனம் செலுத்தப்பட்டது.

முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த தமிழர்களை போர்க்குற்றத்திலிருந்து விடுபடல், வெளிநாட்டு அழுத்தங்களிருந்து தப்பித்தல், நல்லிணக்கத்தை வெளிப்படுத்தல் என்பவற்றுக்காக மஹிந்த அரசுக்கு அவசரமாகக் குடியேற்ற வேண்டியிருந்தது.

இதனால் அமைச்சர் ரிஷாட் தனது மக்களுக்கான பணிகளிலிருந்து பலவந்தமாகத் தூரமாக்கப்பட்ட உணர்வுக்கு உட்பட்டிருந்தார். எனினும் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சகோதர சமூகத்தை மீளக் குடியேற்றியதில் மக்கள் காங்கிரஸ் பெருமிதமுற்றது.

தன் மீது ஏவப்படும் வீணான இனவாதப்பிரச்சாரங்களை மெனிக்பார்ம் மீள்குடியேற்றம் தகர்த்தெறிந்து, தக்க விளக்கமும் கொடுக்கும் என்பது அவரது எதிர்பார்ப்பு.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் தனது சொந்தச்சமூகத்தை மீள்குடியேற்றுகையில் ஏனைய தலைமைகள் புரிந்துணர்வு, பரஸ்பரத்துடன் நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கையும் மக்கள் காங்கிரஸ் தலைமைக்கு இருந்தது.

ஆனால் இப்புரிந்துணர்வு, பரஸ்பரங்களுக்கு புலிகளின் சிந்தனைகளும் சில இணையங்களின் செய்திச் சேவைகளும் பெரும் பேரிடியாகி மீள்குடியேற்றக் காணிகளை பூமிக்குள் அமிழ்த்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில், கடும்போக்கு சிந்தனையில் செயற்படும் சில தமிழ் எம் பிக்களும், காணிப்பற்றாக் குறையுமே பெருந்தலையிடியாகவுள்ளன.

முப்பது வருடங்களுக்கு முன்னர் வெளியேறிய இம்மக்களின் குடிப்பரம்பல் பிள்ளைகள், பேரக்குழந்தைகள் எனப் பெருகியுள்ளன. இவர்களைச் சொந்தக்

காணிகளில் குடியேற்றினாலும் இடங்கள் போதாமல் போகும். காடுகள் வளர்ந்துள்ள இம்மக்களின் சொந்தக் காணிகளையும் வன இலாகா திணைக்களம் சுவீகரித்துள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள மீதிக்காணிகளை துப்புரவு செய்யப்போனால் பேரினவாதமும், பாசிசவாதமும் குறுக்கே நிற்கின்றன.

என்ன செய்வதென்ற அங்கலாய்ப்பில் காலம் கழிகையில் பிரதமரின் வடக்கு விஜயம் அமைச்சர் ரிஷாதுக்கு பெரும் வாய்ப்பானது.

போர் முடிந்து பத்து வருடங்களுக்குப் பின்னர் கிடைத்த சந்தர்ப்பம். விடுமா வடக்குத் தலைமை? முஸ்லிம்களின் விடியலுக்காக ”இரவெல்லாம் தூங்காத சாமக்கோழி போல” விழித்திருந்த அமைச்சர் ரிஷாட், சந்தர்ப்பத்தை தவற விடவில்லை.

வடக்குக்கு வந்த பிரதமரிடம் வாழ முடியாது தவிக்கும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் அவலத்தை விளக்கி, ”முஸ்லிம்களை குடியமர்த்த காணிகளை ஒதுக்குக்கங்கள், சொந்தக் காணிகளை அடையாளம் காண்பதற்கு குறுக்காக நிற்கும் பேரினவாதம், கடும்போக்கு சிந்தனையில் ஊறிய பாசிசவாதம் என்பவற்றை எனது வழியில் குறுக்கிடாமல் உத்தரவிடுங்கள்” என்றார்.

இதுதான் முல்லைத்தீவு அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டத்தில் நடந்தது. யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விவகாரமே சூடு பிடித்திருக்கிறது.

இங்கிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்களில் அதிகமானோர், மீண்டெழும் வாழ்வியல் சமருக்குள் சங்கடப்படுகின்றனர். கிராமங்கள் அதிகமாகவுள்ள மாவட்டங்களிலே காணிகளைப் பெறமுடியா நிலையில் நகர்ப்புறங்களில் இதை எதிர்பார்க்க முடியாது.

இதனால் மக்கள் காங்கிரஸ் தலைமை மாடி வீட்டுத்திட்டத்திற்கு ஆலோசனையை முன்மொழிந்தது. ஆனால் மனிதாபிமான சிந்தனையில்லாத சில இணையங்கள் “தமிழர் தாயகத்தில் முஸ்லிம்களைக் குடியேற்ற ரணில் அனுமதி” எனச் செய்தி வெளியிட்டன.

வடக்கை தமிழர்கள் மட்டும்தான் தாயகமாகக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை புலிகளுடையது. தமிழ் பேசும் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் காலப்போக்கில் கருவிழந்து, கருத்திழந்து படுகொலைப் போராட்டமாகப் பரிணமித்த பின்னர், இப்பாசிசக் கொள்கையை புலிகள் கடைப்பிடித்தனர்.

வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமும், பாசிசச் சிந்தனையின் இறுதி அறுவடையாகவே பார்க்கப்பட்டது. ஏனெனில் இவ்வாறு வெளியேற்றப்பட்டமைக்கு புலிகளின் இரண்டாம், மூன்றாம் மட்டத் தலைமைகள் வருத்தம் தெரிவித்தன, வருந்தியிருந்தன.

இதனால் இப்படியொரு சம்பவம் இனிமேல் இடம்பெறாதென்பதில் முஸ்லிம்கள் உறுதியாக நம்பிக்கை வைத்திருந்தனர்.ஆனால் ஆயுதப் போராட்டத்தில் நிகழ்ந்த அதே தவறு இன்னும் தொடர்வதையே வடக்கு மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் நடந்து கொண்ட சில எம்பிக்களின் நடத்தைகள் காட்டுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களைக்குடியேற்ற காணிகளை மட்டுமே அமைச்சர் ரிஷாட் கோரினார். இத்திட்டங்களுக்காக ஒரு ரூபாவையும் அவர் அரசிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

வடக்கு குடியேற்றத்தில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் அதிக முன்னுரிமை வழங்கப்படுவதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களான சார்ள்ஸ் நிர்மலநாதனும், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவும் எதிர் முழக்கமிட்டது ஏன்?

குதிரைக்கு கொள்ளைக் காட்டி ஒட வைப்பது போல் தமிழர்களிடம் உரிமைகளைப் பேசி இனிமேல் வாக்குக்கேட்க முடியாது என்பது இவர்களுக்குத் தெரியும்.

வடக்கில் வளரும் மக்கள் காங்கிரஸுக்குள் தமிழர்கள் ஈர்க்கப்படுவதைத் தடுத்து, தமிழர்களின் இருப்புக்களை ரிஷாட் பறிப்பதாகக் காட்டுவதூடாக இழக்கப்படும் இருப்புக்களை நிலைப்படுத்தவே இந்த எம்பிக்கள் முனைந்துள்ளனர்.

இதில் இவர்களுக்கு இரட்டிப்பு இலாபம். ஒன்று முஸ்லிம்களின் உரிமைகளைத் தடுப்பது, இரண்டாவது தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதாக அப்பாவித் தமிழர்களை ஏமாற்றுவது.

ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த மாந்தை மேற்கு பிரதேச சபை, மன்னார் பிரதேச சபையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபையும் மக்கள் காங்கிரஸின் வசம் சென்றுவிட்டன.

இந்த எச்சரிக்கை வேட்டுக்கள் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலிலும் தீர்க்கப்படக் கூடாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களில் சிலர் காய்களை நகர்த்துகின்றனர்.

மக்கள் காங்கிரஸுக்கு இன்றுள்ள தேவை அவதியுறும் மக்களை குறிப்பாக முஸ்லிம்களை குடியமர்த்துவதே. தமிழர்களுக்காகப் பேச எத்தனையோ அரசியல் சக்திகள் உள்நாட்டிலும்,

சர்வதேசத்திலும் உள்ளன. வடக்கு முஸ்லிம்களுக்காக யார் பேசுவது? .யார் பேசினாலும் பேச்சளவில் நின்றுவிடாது வேலைகள் செயலுருப் பெற வேண்டுமே. தமிழ் தலைமைகள் இதனைச் செய்யவில்லை. இதுதான் தமிழர்களுக்கு இன்றுள்ள ஆதங்கம்.

முஸ்லிம்களைக் கேட்காமல் வடக்குத் தலைமைகள் எதையும் திணிக்கக் கூடாதென்பது மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு. முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இனப்பிரச்சினைத் தீர்விலும் எழுமாந்தமான தீர்வொன்று திணிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் விரும்பினால் இந்தத் தீர்வு என்று சொன்ன விக்னேஸ்வரன், விரும்பா விட்டால் என்ன தீர்வு? என்பதை விளக்கவில்லை.

மன்னார் கொண்டச்சியில் கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கான மக்கள் காங்கிரஸின் முயற்சிகள் வடமாகாண சபை இயங்கும் வரையிலும் வெற்றியளிக்கவில்லை.

மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னரே கொண்டச்சியில் கைத்தொழில் பேட்டை கை கூடி வருகின்றது. இணங்கிச் செல்லும் மனநிலையை வெளிக்காட்டியே, தமிழ் தவைர்கள் வடக்கு,கிழக்கு இணைப்புப் பற்றிப் பேசுவது வெற்றியளிக்கும் என நினைக்கிறேன்.

வடக்கு,கிழக்கு இணைப்பிலுள்ள சந்தேகங்களைக்களைவதற்கு நீங்களும் விக்னேஸ்வரனும் ஒரு மேசையில் அமர்ந்து பேசினால் என்னவென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரிடம் ஒருமுறை ஒரு ஆலாசனை கேட்டேன். முதலமைச்சர்கள் பேசினால் சிங்களத் தேசம் விழித்துக் கொள்ளும். சிறுபான்மைச் சமூகங்களின் சிவில் அமைப்புக்கள் பேசுவதே பொருத்தமாக இருக்கும் என்றார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் – சுஐப் எம் காசிம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *