காணாமல்போன இளைஞர் சடலமாக மீட்பு!

மஸ்கெலியாப் பகுதியில் கடந்த 18ஆம் திகதி இரவு காணாமல்போனதாகக் கூறப்பட்ட இளைஞர் இன்று (21) காலை 7 மணியளவில் மவுசாகலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று மஸ்கெலியாப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு தினங்களாக மஸ்கெலியாப் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடுல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ரங்கல கடற்படையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு குறித்த இளைஞரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் கூறினர்.

காணாமல்போன 30 வயதுடைய பெத்தும் மதுசங்க லியனகே, மஸ்கெலியா – மவுசாகலை நீர்த்தேக்கம் பக்கம் சென்ற காட்சி அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து காணாமல்போன இளைஞரின் உறவினர்கள் மஸ்கெலியாப் பொலிஸ் நிலையத்தில் 19ஆம் திகதி இரவு முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தனர்.

19ஆம் திகதி இரவு குறித்த இளைஞருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது எனவும், அழைப்பு வந்த பிறகு குறித்த இளைஞர் வெளியில் சென்றார் எனவும், வெளியில் சென்ற இளைஞரைகே காணவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் பாதணி ஒன்று மவுசாகலை நீர்தேக்கத்திற்கு அருகாமையில் கிடந்ததை இளைஞரின் உறவினர்களால் இனங்காணப்பட்டமையை அடுத்து மவுசாகலை நீர்த்தேக்கத்தில் குறித்த இளைஞர் பாய்ந்து இருக்கலாம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதிவான் தலைமையில் மரண விசாரணைகள் இடம்பெற்றன எனவும், சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோத​ணைக்காக சடலம் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது எனவும் மஸ்கெலியாப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டமைக்குக் காரணம் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *