டுபாயில் மதுஷ் மீது விசாரணை தீவிரம்! மேலும் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!! – விமானம் வாங்கவும் திட்டம் போட்டுள்ளார்

மாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

டுபாயில் கராஜ் ஒன்றை நடத்தி வந்த மதுஷ் அதில் வேலை செய்பவர்கள் என்ற பெயரில் தனது சகாக்களையே அமர்த்தியிருந்தார். அந்த நிறுவனத்தின் பெயரில் வங்கிக்கணக்குகள் பலவும் இயங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட வெடிகந்த கசுன் பன்னிப்பிட்டிய இரத்தினக்கல் கொள்ளைக்காக ஆயுதங்களை வழங்கியவர் என்று தெரியவந்துள்ளது.

அத்துடன் இவருக்கு அதற்காக 80 ஆயிரம் ரூபா வழங்கியுள்ள மதுஷ் கடந்த 6 மாத காலத்திற்குள் மாத்திரம் கசுனுக்கு சுமார் பத்து இலட்சம் ரூபா செலவுக்காக அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளது.

மதுஷின் இலங்கை கொள்ளைகளுக்கு ஆயுதங்களை வழங்கிய படைச் சிப்பாய்கள் குறித்தும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இராணுவ சீருடையை அணிந்து செல்லும் குழு ஒன்றை அனுப்பி – இம்மாதம் சிறைச்சாலை வண்டியொன்றை டார்கெட் செய்து சிறையில் உள்ள தெமட்டகொட சமிந்த மற்றும் வெலேசுதா ஆகியோரை போட்டுத்தள்ளவும் மதுஷ் திட்டமிட்டிருந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரத்தினக்கல் எங்கே?

கொழும்பில் கொள்ளையடிக்கப்பட்ட இரத்தினக்கல் டுபாயில் எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது பற்றி விசாரணைகள் நடைபெற்றாலும் இதுவரை அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை..

இரத்தினக்கல் சம்பந்தப்பட்ட விடயம் தெரியாதென மதுஷின் இரண்டாவது மனைவி கையை விரித்தாலும் நவீன தொழிநுட்ப வசதிகளின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் டுபாய் பொலிஸார்.

இரத்தினக்கல்லை டுபாய் கொண்டு சென்றதாக கருதப்படும் நடிகர் ரயன், டுபாய் வந்த தினம் முதல் அவர் சென்றுவந்த இடங்கள் குறித்து முழு விபரத்தை பெற்றுள்ள டுபாய் பொலிஸ் அந்தந்த இடங்களில் தேடுதல்களை நடத்த ஆரம்பித்துள்ளது.

முழு டுபாயும் பாதுகாப்பு சி.சி.ரி.வி. கமராக்களால் சூழப்பட்டுள்ளது. டுபாய் எயார்போர்ட்டில் இருந்து மதுஷ் குழுவினர் விருந்து நடத்திய ஹோட்டல் வரை இருக்கும் சுமார் 8 ஆயிரம் சி.சி.ரி.வி. கமராக்கள் மூலம் ஆராயப்பட்டே விசாரணைகள் நடைபெறுவதாகத் தகவல்.

விமானம் வாங்கவும் திட்டம்

மாக்கந்துர மதுஷ் இன்னும் சில காலத்தில் இலகு விமானம் ஒன்றை வாங்கத் திட்டம் வைத்திருந்ததாக தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.

‘சீ ப்ளேன்’ எனப்படும் இலகு விமானம் ஒன்றை வாங்குவதன் மூலம் இலங்கை வந்து செல்ல வசதியாக இருக்கும் என அவர் கருதியதாகச் சொல்லப்படுகிறது. சர்வதேச கடற்பரப்பு வரை அதில் வந்து அதன் பின்னர் படகில் இலங்கை வருவது அவரது உத்தேசமாக இருந்ததாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ஆனால், அவர் அதனை அதனை டுபாயில் வைத்திருக்க விரும்பினாரா அல்லது வேறு நாடு ஒன்றில் வைத்திருக்க முயன்றாரா என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை.

இதற்காகப் பல விமான நிறுவனங்களுடன் மதுஷ் தரப்பு ஆரம்பகட்ட பேச்சுக்கள் நடத்தியுள்ள தகவல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

அரசியல்வாதிகள் குறித்து விசாரணை

மதுஸுடன் தொடர்பை வைத்திருந்த அரசியல்வாதிகள் குறித்து நடக்கும் விசாரணைகளில் கூட பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

சில அரசியல்வாதிகள் சண்டித்தன அரசியலுக்காகவும் – சிலர் போதைப்பொருள் வியாபாரத்திற்காகவும் – பலர் போதைப்பொருள் தேவைக்காகவும் மதுஸுடன் தொடர்புகளை வைத்திருந்தமை அறியப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்புத் தரப்பின் உயர்மட்ட பிரமுகர்கள் சிலரும் – சிறைச்சாலைகள் திணைக்கள உயர் பிரமுகர்கள் சிலரும் சிக்கியுள்ளனர். அவர்களின் பெயரில் உள்ள சொத்துக்கள் எப்படி வந்தன என்பது பற்றி ஜனாதிபதியின் பணிப்பில் இரகசிய விசாரணைகள் நடக்கின்றன.

பலர் மதுஷிடம் இருந்து பணம் வாங்காமல் பொருட்களை இலஞ்சமாகப் பெற்றுள்ளமையும் தெரியவந்துள்ளது. அவை தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

இந்த விசாரணைகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகள் பலர் கடந்த காலங்களில் எவ்வாறு நடந்து கொண்டனர்? அவர்களுடன் மிக நெருக்கமாக பழகியோர் யார்? அவர்களின் நடத்தை எப்படி? அவர்கள் அடிக்கடி செல்லும் நாடு எது என்பன பற்றி அவர்களின் மெய்ப்பாதுகாவலர்களிடம் இரகசிய ஆய்வுகள் நடப்பதாகவும் தகவல்.

மதுஸுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் பலரும் இப்போது மறைமுகமாக அரசியல் அடைக்கலம் தேடுவதாகவும் அறியமுடிகின்றது.

– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *