மன்னார் மனிதப் புதைகுழி: நீதிமன்றுக்கு நாளை வருகின்றது ‘காபன் பரிசோதனை’ அறிக்கை!

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கை நாளை (20) புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த 16ஆம் திகதி அதிகாலை அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்சவால் பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து மனித எச்சங்களின் காபன் பரிசோதனை ஆய்வறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மனித எச்சங்களின் 6 மாதிரிகள் மீதான காபன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 5 மாதிரிகளின் அறிக்கை கடந்த சனிக்கிழமை (16) பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதை உறுதிப்படுத்திய சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச, அறிக்கையில் என்ன விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டார்.

காபன் பரிசோதனை அறிக்கை நாளை (20) மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தில் கார்பன் பரிசோதனைக்காக கடந்த மாதம் 25ஆம் திகதி கையளிக்கப்பட்டதோடு, மனித புதைகுழியில் தொடர்ச்சியாகவும் மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை 146 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின்போது 323 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் 314 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 28 சிறுவர்களுடையன.

காபன் அறிக்கை தொடர்பான பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

படுகொலை குறித்த தகவல் மட்டுமல்லாமல், அரசியல் ரீதியான அதிர்வையும் ஏற்படுத்தலாம் என்பதால், இந்த விவகாரத்தில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *