பெருந்தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் என்ன? ஒரு மாதத்துக்குள் அறிக்கை கோருகிறார் மைத்திரி!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு மற்றும் பெருந்தோட்டத் தொழிற்துறை வீழ்ச்சி தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வழிவகைகளை ஆராய்ந்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களதும் பெருந்தோட்டத் தொழிற்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் உயர்மட்டக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதன்போது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரதும் கருத்துகளைக் கேட்டறிந்த ஜனாதிபதி மேற்படி பணிப்புரையை விடுத்தார்.

அத்துடன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட குழு, ஒவ்வொரு வாரமும் சந்திக்க வேண்டும் எனவும் உரிய பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமாக ஆராய்ந்து தகவல்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் மற்றும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை நேரடியாகத் தலையிட்டு ஆராயுமாறு மக்கள் பணியகம் கடந்த வாரம் ஜனாதிபதியைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தது.

அதன் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, ஜனாதிபதியின் அலுவலக பிரதானி எச்.எம்.எம். ஹிட்டிசேகர, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர், திறைசேரியின் மேலதிக செயலாளர், தொழில்

திணைக்களத்தின் தலைவர், தேயிலைச் சபையின் பணிப்பாளர், தொழில் ஆணையாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் முதலாளிமார் சம்மேளனம், தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம், சிறு தேயிலைத்தோட்ட உரிமையாளர் சங்கம்,

தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பெருந்தோட்டத்துறை சார்ந்த அமைப்புகளின் உயர்மட்ட அதிகாரிகளும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனும், டுநுயுனு மக்கள் பணியக உறுப்பினர்களும் முதற்கட்ட கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
இலங்கையில் தேயிலைத்துறை வீழ்ச்சியடைந்து வருகிறது.

தேயிலை ஏற்றுமதியின் விகிதாசாரத்தைப் பார்க்கும்போது இது தெளிவாகப் புலனாகிறது. தேயிலை, இறப்பரை மீள்நடுகை செய்யாமை இங்கே முன்வைக்கப்படுகின்ற பொதுவான குற்றச்சாட்டாகும். இதனால் நாட்டின் தேசிய வருமானத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் தொடர்பில் நெருக்கடியான நிலைமையை எதிர்கொண்டுள்ளார்கள். அவர்களுடைய வாழ்க்கைச் சூழல், நலன்புரி விடயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளோம்.

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் முக்கியமான தொழிற்துறை வளர்ச்சிக்கு உரிய பங்களிப்பை வழங்க நான் தயாராக இருக்கிறேன்.

இதற்காக அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உட்பட இதர பிரச்சினைகள் காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் தொழிலாளர்களுக்கும் தொழிற்துறையின் செயற்திறனை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, தேயிலை ஏற்றுமதியாளர்கள், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

பொருளாதார ரீதியில் ஸ்திரமற்ற நாடுகளுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்வதால் பாரிய பாதிப்புகளை சந்திப்பதாகவும் தாய்வானுக்கு அனுப்பப்பட்ட 16 தேயிலைக் கொள்கலன்கள் அண்மையில் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் ஏற்றுமதியாளர்கள் கருத்து வெளியிட்டனர்.

தோட்டத் தொழிலாளர்களின் அடுத்த சந்ததியினர் பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபடுவதற்கு விரும்பாமை மற்றும் தொழிலாளர் வர்க்கத்தினர் வேறு தொழில்களை நாடிச் செல்கின்றமையால் தொழிற்துறையை கொண்டு செல்வதில் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

ஏற்றுமதி வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்குவதன் மூலம் அல்லது நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகின்ற வரிகளுக்கு சலுகை வழங்குவதன் மூலம் அந்தத் தொகையை தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் நலன்புரி விடயங்களுக்குப் பயன்படுத்தலாம் என முத்தையா முரளிதரன் கருத்து வெளியிட்டார்.

அத்துடன் ஏனையோரது கருத்துகளையும் கேட்டறிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் அலுவலக பிரதானி எச்.எம்.எம். ஹிட்டிசேகர தலைமையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர், திறைசேரியின் மேலதிக செயலாளர், தொழில் திணைக்களத்தின் தலைவர்,

தேயிலைச் சபையின் பணிப்பாளர், தொழில் ஆணையாளர் ஆகியோருடன் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், சங்கங்களின் பிரதிநிதிகள், டுநுயுனு மக்கள் பணியகத்தின் பிரதிநிதிகள் உள்ளட்ட விசேட குழுவொன்றை அமைத்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறும் பெருந்தோட்டத் துறை வீழ்ச்சி தொடர்பில் ஆராயுமாறும் பணிப்புரை விடுத்த ஜனாதிபதி ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கலந்துரையாடலுக்கு மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *