66 இறந்த உடல்கள் மீட்பு! நைஜீரியாவில் நடப்பது என்ன?

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில், 22 குழந்தைகள் மற்றும் 12 பெண்களின் உடல்கள் உட்பட 66 பேரின் இறந்த உடல்களைக் கண்டுபிடித்துள்ளததை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

‘குற்றப்பின்னணி உடையவர்களால்’ கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரிகள், கொல்லப்பட்டவர்கள் குறித்த விவரங்களையோ, கொலைகளுக்கான நோக்கம் என்ன என்பதையோ இதுவரை உறுதிசெய்யவில்லை.

மத ரீதியான மோதல்களால் இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் என ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இன்று, சனிக்கிழமை, நைஜீரியா தேசியத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், நேற்று, வெள்ளிக்கிழமை, இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

76 வயதாகும் நைஜீரிய அதிபர் முகமது புகாரி மீண்டும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

நைஜிரியாவின் கதுனா மாகாணத்தில் அமைந்துள்ள குஜுரு பகுதியில் இருக்கும் எட்டு வெவ்வேறு கிராமங்களில் இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது.

காவல் அதிகாரிகள் இது தொடர்பாக கைதுகளை மேற்கொண்டுள்ளதாக அம்மாகாண ஆளுநர் நசீர் எல்-ரூஃபியா கூறியுள்ளார்.

பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட சமூகக் குழுக்களை சேர்ந்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், சந்தேகிக்கப்படும் நபர்கள், அவர்களின் நோக்கங்கள் ஆகியவை பற்றி எதையும் தெரிவிக்கவில்லை.

இந்தப் பிராந்தியத்தில் கடந்த வாரமே மோதல்கள் உருவாகி இருக்கலாம் என்றும், சம்பவங்கள் நிகழ்ந்த கிராமங்கள் தொலைதூரப் பகுதிகளில் இருப்பதால், நிகழ்வுகள் வெளியே தெரியத் தாமதமானது என்றும் பிபிசியின் ஆப்பிரிக்க பாதுகாப்பு செய்தியாளர் டோமி ஒலாடிப்போ தெரிவிக்கிறார்.

கிறிஸ்தவத்தைச் சேர்ந்த அடாரா எனும் இனக்குழுவின் உள்ளூர் தலைவர் மைசமாரி டியோ என்பவர், ஃபுலானி முஸ்லிம் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் தங்களைத் தாக்கியதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

அவர் இவ்வாறு கூறியது முதல் அங்கு பதில் தாக்குதல்களும் நடந்து வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *