மறக்கவும் முடியாது – மன்னிக்கவும் முடியாது! ரணிலின் யோசனைக்கு விக்கி போர்க்கொடி!

பொறுப்புக்கூறல் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இன்று (16) நிராகரித்தார்.

” சர்வதேசத்தின் உதவியுடன் இலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடந்த பின்னரே, மறப்பதா அல்லது மன்னிப்பதா என்ற முடிவுக்கு வரமுடிவும்.” என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலவலகத்தில் இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம் இன்று  நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சி.வி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

” கடந்தகால தவறுகளை மறப்போம், மன்னிப்போம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது யாழ். விஜயத்தின்போது கருத்து வெளியிட்டிருந்தார். கவலையை வெளிப்படுத்துங்கள், ஆனால், உண்மையைக் கண்டறிய முனையாதீர் என்பதே அவரின் வாதமாக உள்ளது.

அதுமட்டுமல்ல, அபிவிருத்தி  எனும் போர்வையில்,  பணம் தருகின்றோம், தமிழ் எம்.பிக்களுக்கு  சலுகைகள் வழங்குவோம்.  பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி, பொறுப்புக்கூறலிலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றார்.

இது உள்நோக்கம்கொண்ட அறிவிப்பாகும்.  ஜெனிவா தொடர்பில் இலங்கை குறித்து கேள்விகள் எழுப்படவுள்ளன.  நாங்கள் வடக்குக்கு சென்று, அங்குள்ளவர்களுடன் பேசிவிட்டோம். எனவே, மீண்டும் காலஅவகாசம் தாருங்கள் என கேட்பதற்காகவே பிரதமர் இவ்வாறு தந்திரம் வகுத்துள்ளார்.

எனவே ஜெனிவாவில் மீண்டும் கால அவகாசம் பெற்றுக் கொடுங்கள் என்று பிரதமர் கூறிச் சென்றுள்ளார். இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனமாகத் தலையசைத்ததைப் பார்த்தால் அதற்கு அவர்கள் தயாராகி விட்டதாகவே தெரிகின்றது.

ஆனால் முதலில் சர்வதேச உதவியுடன் இலங்கையில் போர்க்குற்ற விசாரணையை நடத்தி, இங்கு இடம்பெற்றது இனப்படுகொலை ஆராய்ந்து கொள்ள வேண்டும். அதன் பின்னரே மன்னிப்புத் தொடர்பாக நாம் ஆராய முடியும்” என சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *