மைத்திரி – ரணில் – மஹிந்த இணைந்து தமிழர்களுக்குத் தீர்வைத் தரவேண்டும்! – சித்தார்த்தன் எம்.பி. கோரிக்கை

“நீண்ட காலமாகத் தொடரும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஐனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறு தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாகவே இந்த நாட்டையும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்.

கோப்பாய் பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்தக் கட்டடத்தைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே சித்தார்த்தன் எம்.பி. பிரதமர் முன்னிலையில் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் வடக்குக்கு வந்துள்ளனர். அவர்களிடம் எங்களது பிரச்சினைகள், தேவைகள் தொடர்பிலும் எடுத்துக் கூறியுள்ளோம்.

குறிப்பாக இந்தப் பிரதேசத்தின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதேச சபைத் தவிசாளர் பிரதமரிடம் எடுத்துக் கூறியிருக்கின்றார். அவற்றைத் தீர்த்து வைக்குமாறு அமைச்சர்களைப் பிரதமர் பணித்திருக்கின்றார்.

இந்த நாட்டில் நீண்டதொரு யுத்தம் நடைபெற்றிருக்கின்றது. இந்நிலையில், தற்போது அபிவிருத்தி வேலைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஆராய்வதற்காகப் பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் இங்கு வருகை தந்திருக்கின்றனர். அவ்வாறு இவற்றை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியது அவசியமானது.

ஆனாலும், இந்த அரசு எமது பகுதிகளில் மேற்கொள்ளும் அபிவிருத்தி வேலைகள் அல்லது உதவிகள் என்பன யானைப் பசிக்குச் சோளம் பொரி போன்றதாக இருப்பதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அதனையும்விட அதிகளவிலான செயற்பாடுகள் தற்போது நடைபெறுகின்றன.

ஆகவே, எமது பிரதேசத்தில் முழுமையான அபிவிருத்தியும் பிரதேசத்துக்கான உதவியும் மிகவும் தேவையாக உள்ளது. அதனை அரசு செய்து கொடுக்கவேண்டும்.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. கடந்த 70 வருடங்களுக்கு மேலாக ஒரு நியாயமான தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். ஆனால், தீர்வுதான் வரவில்லை. ஆகவே, தமிழ் மக்களுடைய நீண்டகாலப் பிரச்சினையான இனப் பிரச்சினைக்கான தீர்வை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென நாங்கள் கோருகின்றோம்.

தமிழ் மக்களுடைய அபிலாஷைகளைத் தீர்க்கக் கூடியதான அத்தகையதொரு தீர்வுக்கு ஜனாதிபதி,பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் அவர்களது கட்சிகளும் உதவ வேண்டும் எனக் கேட்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *