விடுதலையை வலியுறுத்தி தொடர்கின்றது முருகன் – நளினி உண்ணாவிரதம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் முருகன் ஆகியோர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

தமது விடுதலையை வலியுறுத்தியே அவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், நளினி உட்பட எழுவரை விடுவிப்பதற்கான தீர்மானத்தை ஆளுநர் எடுக்க முடியும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.

ஆனால், இவ்விடயத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதுவரை தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை. ஆகையால், தங்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

நளினியின் கணவரான முருகன், வேலூர் ஆண்கள் சிறையில் கடந்த 2ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றார். அவருக்கு ஆதரவாக நளினி கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரதமிருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

28 வருடங்களாகச் சிறைவாசம் அனுபவித்துவரும், தங்களை விடுதலை செய்யுமாறும், உண்மையைக் கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

அவ்வாறு இல்லாவிடின் தம்மை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கவேண்டுமென கடந்த ஜனவரி
மாதம் 10ஆம் திகதி முருகன் ஆளுநரை கடிதம் மூலம் கோரினார்.

அதற்குப் பதில் கிடைக்காத நிலையிலேயே கடந்த 2ஆம் திகதி முதல் முருகன் சாகும்வரை உண்ணாவிரதப்
போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

அதற்கமைய இன்று 13ஆவது நாளாக முருகனின் போராட்டம் தொடர்ந்த அதேவேளை, நளினியின் போராட்டம் 3ஆவது நாளாகத் தொடர்ந்தது.

உண்ணாவிரதமிருக்கும் நளினியின் உடல் நிலை மோசமடைந்துள்ளது எனவும், அவர் சிகிச்சை பெற மறுத்து வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *