அப்பட்டமான பொய்! காதல் தினத்தில் நவீனை கொத்துகிறது இ.தொ.கா.!

நிலுவைச்சம்பளம் தொடர்பில் பெருந்தோட்டத்துறை  அமைச்சர் நவீன் திஸாநாயக்க வெளியிட்டுள்ள கருத்து அப்பட்டமான பொய்யாகும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர்களில் ஒருவரான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு இம்முறை நிலுவைச்சம்பளம் வழங்கப்படமாட்டாது என்றும், இது தொடர்பில் தொழிற்சங்கங்களும் எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நேற்று அறிவித்தார்.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு  காலதாமதம் ஏற்பட்டாலும், அது காலாவதியான தினத்திலிருந்து தொழிலாளர்களுக்கு நிலுவைச்சம்பளம் வழங்கப்படவேண்டும் என கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறையும் இழுத்தடிப்புக்கே மத்தியிலேயே அதாவது மூன்று மாதங்களுக்கு பின்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. நிலுவைச்சம்பளம் வழங்கப்படும் என தொழிற்சங்கங்களும் அறிவித்திருந்தன.

இந்நிலையில், பெருந்தோட்டத்துறை அமைச்சரின்  அறிவிப்பு தொடர்பில் வினவியபோது மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ் கூறியவை வருமாறு,

” நிலுவைச்சம்பளத்தை வழங்குவதற்காகவே ஆயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க அறிவித்திருந்தார். அதுதொடர்பான காணொளி ஆதாரங்களும் உள்ளன.

எனினும், தற்போது வேறு விதத்தில் பேசுகிறார். இது அப்பட்டமான பொய்யாகும். நிலுவைச் சம்பளத்தை வழங்க வைத்திருந்த பணத்தைதான், நாளாந்த கொடுப்பனவாக வழங்குவதற்கு தற்போது இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

எம்மால் முடிந்த தொகையை நாம் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுத்துவிட்டோம். அதைவிடவும் கூடுதல் தொகையை எவராவது பெற்றுக்கொடுத்தால் ஆதரவளிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தோம்.

கூட்டு ஒப்பந்த விவகாரத்தை அரசியல் மயப்படுத்த நாம் விரும்பவில்லை. 140 ரூபா பெற்றுத்தருவோம் என கூறிய தமிழ் முற்போக்கு கூட்டணி, இப்போது நிலுவைச் சம்பளத்துக்கும் வேட்டு வைத்துள்ளது என்றெல்லாம் எங்களுக்கும் விமர்சிக்க தெரியும். ஆனால், அதை  நாம் செய்யமாட்டோம்.” என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *