அரசியல் சூழ்ச்சியால் அரசமைப்புப் பாதிப்பு! – மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோய்விட்டது என்கிறார் ரணில்

“புதிய அரசமைப்பு உருவாக்கத்தைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் எமது அபிவிருத்திப் பணிகளை முடக்கும் வகையிலும்தான் கடந்த வருடம் ஒக்டோர் மாதம் 26ஆம் திகதி ‘அரசியல் சூழ்ச்சி’ அரங்கேற்றப்பட்டது. இந்த அரசியல் சூழ்ச்சியை 52 நாள்களில் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். ஜனநாயக வழியில் தளராது போராடி ஆட்சியை மீளவும் கைப்பற்றினோம். ஆனால், புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு, பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றுக்கு பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கொழும்பு செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசியல் சூழ்ச்சியால் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் இருந்த கூட்டு அரசு முறிவடைந்தது. தற்போது தனி அரசே தொடர்கின்றது. இதனால் புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளன.

அரசமைப்பு உருவாக்கப் பணிகளை நாம் தீவிரப்படுத்தினாலும் அதனை நிறைவேற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் வேண்டும்.

எனவே, அந்தப் பலத்தை நோக்கியே நாம் தற்போது நகர்கின்றோம்.

காலம் தாமதித்தாலும் நாட்டு மக்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதியின் பிரகாரம் புதிய அரசமைப்பை ஏதோவொரு வழியில் நிறைவேறியே தீருவோம்.

அது எப்போது? எந்த வழியில் நிறைவேற்றப்படும்? என்று இப்போதைக்கு எம்மால் சொல்ல முடியாது.

அதேவேளை, புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளில் மட்டும் கவனத்தைச் செலுத்தாமல் அபிவிருத்திப் பணிகளிலும் நாம் அனைவரும் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

அரசியல் சூழ்ச்சியால் தாமதமான அபிவிருத்திப் பணிகளை விரைவாக முன்னோக்கி நகர்த்திச் செல்வோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *