ஹக்கீமுக்கும், ரிஷாட்டுக்கும் அமைச்சரவையில் ஏமாற்றம் ! சம்பிக்கவுக்கு சார்பாக செயற்பட்ட ஜனாதிபதி!

புத்தளம் அறுவைக்காடு குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாண  தொடர்ந்தும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அரச  தொலைகாட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று இரவு  (13)  கலந்து கொண்ட அமைச்சர், குப்பை பிரச்சினை தொடர்பான கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே இதனைத்தடுப்பதற்காக  தங்கள் மேற்கொண்ட, மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விபரித்தார்.

கடந்த வாரத்திற்கு முதல் வாரம் அமைச்சரவைக்கூட்டத்திலும்  புத்தளத்திற்கு குப்பைகளை கொண்டுவருவதன்  எதிர் விளைவுகளை நானும்  அமைச்சர் ரவுப் ஹக்கீமும் எடுத்துரைத்தோம். குப்பையை கொண்டுவருவதை  எதிர்த்து  பேசினோம்.

எனினும் ஜனாதிபதி அமைச்சர் சம்பிக்கவுக்கு ஆதரவாகவே  முற்று முழுதாக  செயற்பட்டார். பிரதமர் ரணில் விக்கரம சிங்க எதுவுமே பேசாது அங்கு அமைதியாக இருந்தார். எனினும் நாங்கள் எங்களது நிலைப்பாட்டை வலியுறுத்தினோம்.

எங்களுடன் அவர்கள்  முரண்பட்டனர். இது நீண்டகாலமாக ஆய்வு செய்யப்பட்டு, முடிவெடுக்கப்பட்ட பிரச்சினை . இதனால் எத்தனை உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. இப்போது இதனை நாங்கள் எவ்வாறு நிறுத்துவது என்று ஜனாதிபதி சொன்ன போது கடுமையான வாக்குவாதங்கள் அங்கு இடம்பெற்றன .

நாங்கள் எவ்வளவோ அழுத்தியும் அவர்கள் விடாப்பிடியாக இருக்கின்றனர். நேற்றும் (12)  அமைச்சரவைக்கூட்டம் முடிந்த பின்னர் நானும் ஹக்கீமும் அமைச்சர் சம்பிக்கவிடம் மீண்டும் இந்த பிரச்சினையை எடுத்துரைத்தோம்.

இம்மாதம் 15 ஆம் திகதி புத்தளத்தில் பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற இருப்பதாகவும் கூறினோம். எனது கட்சி ஆதரவாளர்களும் நேரடியாக என்னிடம் இதனை தெரிவித்தார்கள் என்றேன்.

புத்தளம் மக்கள் மிகவும் நொந்த நிலையில் இருக்கின்றார்கள். இந்த அரசை உருவாக்கியதில் இவர்களுக்கு பாரிய பங்கு இருக்கின்றது என்று சுட்டிக்காட்டினேன்.  புத்தளத்து மக்களின் கருத்துக்களுடனேயே நாங்களும்  இருக்கின்றோம்.

என்று கூறினோம். எமது கட்சியை பொறுத்த வரையில் இந்த பிரச்சினை தொடர்பில் எதிர்காலத்தில்  சில நடவடிக்கைகளை மேற்கொள்வோம். என அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *