பின்வரிசை எம்.பிக்களுக்கு ‘வெட்டு’ – அரசுமீது வேலுகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!

பின்வரிசை எம்.பிக்கள் முழுமையாக ஓரங்கட்டப்படும் முறைமையே இலங்கை பாராளுமன்றத்தில் தொடர்கின்றது – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.
கண்டியில் இன்று (13) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,
”பாராளுமன்ற உறுப்பினர் என்றால் சர்வ வல்லமை படைத்தவர்கள் என்றும், அவர்கள் நினைத்தால் வானத்தைக் கூட வளைத்து விடலாம் என்றும் எம்மில் சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
அதனால்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் இணைந்து செய்யவேண்டிய வேலையைக்கூட  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு செய்யாவிட்டால் சரமாரியாக விமர்சனங்களைத் தொடுக்கின்றனர்.
மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளுக்கு பாராளுமன்றத்தில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும். குறிப்பாக பின்வரிசை எம்.பிக்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்.
ஆனால், இலங்கையில் இன்றைய 21 ஆம் நூற்றாண்டிலும் கட்சி அரசியலே நடத்தப்படுவதால், அதி உயர்சபையிலும் ‘வெட்டுக்குத்து’ அரசியல் ஏதோவொரு வடிவில் தொடர்கின்றது என்பது கசப்பான உண்மையாகும்.
‘முடியாத’ கட்டத்தில் உள்ளவர்களுக்கு கூட ‘முக்கிய’ அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுகின்றன. துறைசார் விடயத்தில் தேர்ச்சி இல்லாதவர்களுக்கு அதே அமைச்சுப் பதவி வழங்கப்படுகின்றது. அரசாங்க இயந்திரம் சிறப்பாக செயற்படுவதற்கு இத்தகைய அணுகுமுறைகளே பெரும் தடையாக உள்ளன.
அமைச்சுப் பதவி கிடைக்காததால் தான் அரசாங்கத்தையே இவ்வாறு விமர்சிக்கின்றார் என சிலர் வியாக்கியானம் கூறலாம்.
ஆனால், உண்மை நிலைமையை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய தேவைப்பாடு எமக்குள்ளது. பின்வரிசை எம்.பியொருவர் என்ற அடிப்படையில் தேசிய அரசியலிலும், பாராளுமன்றத்திலும் பல சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளன.
ஒரு அபிவிருத்தித்திட்டத்தை முன்னெடுப்பதாக இருந்தால் கூட பல தடைகளை தாண்டி வர வேண்டியுள்ளது. அப்படி வந்து நாம் சேவை செய்தால் கூட அதற்கும் சேறு பூசுபவர்கள் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர்.
‘சிஸ்டம்’ சரியில்லை என அரசாங்கத்துக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்துவிடவும் முடியாது. ‘சிஸ்டம்’ மாறவேண்டும் என்பது தான் எமது கருத்தாகவும் இருக்கின்றது.
பின்வரிசை எம்.பிக்களுக்கும் அனைத்து விடயங்களிலும் வாய்ப்பளித்து, அவர்கள் வளர்த்தெடுக்கப்படவேண்டும்.  அப்போதுதான் நாளை அமைச்சர் ஆனால் கூட, எவ்வித தங்கு தடையுமின்றி அவர்களால் சிறப்பான சேவையை வழங்கக்கூடியதாக இருக்கும்.
மாறாக ‘திருப்தி அரசியலுக்காக’ கீழ்மட்டத்தில் உள்ளவொருவரை உடனே மேல்மட்டத்துக்கு கொண்டுவந்துவிட்டால் அப்போதும் மாற்றம் ஏற்படாது.
அதேவேளை, சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை என்றபோர்வையில் விவாதங்களின் போது பின்வரிசை எம்.பிக்கள் புறக்கணிக்கப்படும் நிலைமையும் இருக்கின்றது. அப்படியே உரையாற்ற வாய்ப்பு கிடைத்தாலும், அது நிமிடங்களுக்கே மட்டுப்படுத்தப்படும்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவதற்கும், சட்டமூலங்களை நிறைவேற்றிக்கொள்வதற்குமென வாக்களிப்பு இயந்திரமாக மட்டும் பின்வரிசை எம்.பிக்களை பயன்படுத்தக்கூடாது. எனவே, தற்போதையை அரசியல் முறைமை பாராளுமன்றத்தில் மாற்றயமைக்கப்படவேண்டும். ” என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *