கிழக்கு ஆளுநரின் சேவைகளுக்கு முன்னாள் முதலமைச்சர் பாராட்டு

“கிழக்கு மாகாணத்தில் முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்களாக சுமார் 4 ஆயிரத்து 500 பேர் கடமையாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த காலங்களில் குறிப்பிடத்த அளவு சம்பளம் வழங்கப்படாமையைக் கருத்தில் கொண்டு நான் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் 3000 ரூபா வீதம் மாதாந்த சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவும் அவர்களுக்குப் போதாது என்பதை நாம் அறிந்திருந்தபோதும் எதிர்காலங்களில் இதற்கான ஏற்பாடுளை செய்ய வேண்டும் என நினைத்திருந்தோம். இந்நிலையில், இந்த ஆசிரியர்களின் மாதாந்த சம்பளத்தை 3000 ரூபாவில் இருந்து 4000 ரூபாவாக உயர்த்தி வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க அம்சமாகும்.”

– இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“கிழக்கு மாகாணத்தில பல்வேறுபட்ட கஷ்டங்களுக்கு மத்தியில் நீண்ட தூரம் பயணித்து தங்களது பணிகளை இவர்கள் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு உண்மையில் இந்த சம்பள உயர்வுகள் பொதுமானவையல்ல. குறைந்தது 10 ஆயிரம் ரூபாவாவது இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதனை நாம் ஒரே தடவையில் செய்து விட முடியாது. கட்டம் கட்டமாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

என்னால் நகர்த்தப்பட்ட முதல் கட்டத்தை ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இரண்டாம் கட்டத்திற்கு நகர்த்தியிருப்பது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியது. அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன், கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் ஆசிரியர்களுக்கான மேலதிக பயிற்சிகளை வழங்குவதற்கும் முன் வந்திருப்பதையும் பாராட்டுகிறேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *