மதுஷ் குழு சிக்கிய விவகாரம்: திடுக்கிடும் தகவல் அம்பலம்!

டுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகர் – பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை கைதுசெய்த பின்னர் அவர்களின் இலங்கைத் தொடர்புகளை தேடி விசேட அதிரடிப் படை வலைவிரித்துள்ளது.

தலைவர்களே இதில் சிக்கியுள்ளதால் உயிராபத்தை விரும்பாத பலர் சுயவிருப்பின் பேரில் சரணடைய முயன்று வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் சொல்கின்றன.

அதேவேளை, டுபாயில் கைப்பற்றப்பட்ட மதுஷ் மற்றும் சகாக்களின் தொலைபேசிகளில் உள்ள விபரங்களை வைத்து அவர்கள் இலங்கையில் தொடர்புகளைக் கொண்டிருந்தோர் யார் என்பதை அடையாளம் காணும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது விசேட அதிரடிப்படை.

மதுஷ் நாடு கடத்தப்படுவாரா?

மதுஷ் கைதுசெய்யப்பட்ட பின்னர் அவரும் அவருடன் இருந்த முழு ரீமும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் எல்லோரும் மது அருந்தி – கொக்கெய்ன் மற்றும் ஹெரோயின் பாவித்து இருந்தமை கண்டிபிடிக்கப்பட்டது.

ஆனால், இங்கு குறிப்பிடத்தக்க விடயம் ஒன்று உள்ளது. முன்னர் வெளிவந்த செய்திகளின்படி மதுஷ், மதுவோ அல்லது போதைப்பொருளோ அருந்தியிருக்கவில்லை எனப் புதிய தகவல் ஒன்று சொல்கிறது. (மது மற்றும் எந்தப் போதைப்பொருளையும் மதுஷ் இப்போது பாவிப்பதில்லை என்பது கூடுதல் தகவல்)

பாடகர் அமலின் மகன் – மதுஷ் மற்றும் கஞ்சிப்பான இம்ரான் ஆகியோரின் மனைவிமார் உட்பட ஆறு பேர் இதனால்தான் விடுவிக்கப்பட்டனர்.

அப்படியானால் மதுஷ் ஏன் விடுவிக்கப்படவில்லை என்று யாரும் கேட்கலாம்… அங்குதான் மேட்டரே உள்ளது…

போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ள டுபாயில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலே போதைப்பொருள் இருந்தாலே தண்டனைதான்.

மதுஷ் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்தவர் – போதைப்பொருள் வர்த்தகர் மற்றும் அங்கு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அளவும் பெரிது என்பதால் மதுஷ் பிரதான குற்றவாளியாக வட்டமிடப்பட்டுள்ளார்..

எனவே, அவர் மீதான விசாரணை நடந்து முடியும்வரை அவர் நாடுகடத்தப்படும் வாய்ப்பு குறைவு என்கின்றன தகவல்கள்.

மதுஷின் விருந்து நிகழ்வில் அவர்களுக்குத் தெரியாமல் பெரும் அளவிலான ஹெரோயின் உள்ளே வந்தது எப்படி என்பது அவர்களுக்கே தெரியவில்லை.

டுபாய் பொலிஸார் அவர்களின் கண்முன் கைப்பற்றியபோதே தங்களுக்குள் இருந்த ஒரு கறுப்பு ஆடு அதனைத் திட்டமிட்டு வைத்திருந்தது மதுஷ் ரீம் உணர்ந்தது. அப்போது எல்லாமே லேட்…!

கைது பற்றிய மேலதிக விபரங்கள்

மதுஷ் மற்றும் சகாக்கள் கைதுசெய்யப்பட்ட தினமன்று அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அப்படி கூடுவார்கள் என்று அவர்களுக்குள் இருந்த புலனாய்வுப் புள்ளி நினைக்கவில்லை.

பிறந்த நாள் நிகழ்வு என்ற பெயரில் எஸ்.ரீ.எவ். – டீ.ஐ.ஜி. லத்தீப்பின் ஓய்வைக் கொண்டாடுவதே அவர்களின் மறைமுகத் திட்டமாக இருந்ததாக சொல்லப்படுகின்றது.

எப்படியோ மதுஷ் மற்றும் சகாக்களின் ஒன்றுகூடலை கண்காணித்த புலனாய்வாளர் உடனடியாக கொழும்புக்குத் தகவல் கொடுக்க திட்டங்கள் மாறின. முன்னதாக ஒருவரை அல்லது இருவரை டுபாய் பொலிஸாரின் உதவியுடன் கைதுசெய்யலாம் என நினைத்த இலங்கை விசேட அதிரடிப்படை, தனது திட்டத்தை மாற்றி இதைப்பற்றி பெரிய படம் ஒன்றை டுபாய் பொலிஸாருக்குக் காட்டத் தீர்மானித்தது.

அதற்கமைய அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்த அந்த இலங்கைப் புலனாய்வாளர், டுபாய் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து – சர்வதேச பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரைக் கூறி – அந்த அமைப்பின் இரகசியக் கூட்டம் ஒன்று நடப்பதாக அறிவித்திருக்கின்றார்.

உடனடியாக அலெர்ட் ஆகி சுமார் பத்து நிமிட இடைவெளிக்குள் அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அனைவரையும் முற்றுகையிட்டனர். “ஆயுதங்கள் இருந்தால் கீழே வைத்து விடுங்கள். யாரும் அசையக் கூடாது” என உத்தரவிட்டு தேடுதல் நடத்தியபோதே இவர்கள் தீவிரவாதிகள் அல்லர்; ஆனால், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என உணர்ந்தனர் டுபாய் பொலிஸார்.

உடனடியாக எல்லோரையும் முழந்தாளிடச் செய்து படம் எடுத்த கையோடு அனைவரும் தனி அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒருவருடன் ஒருவர் பேச அனுமதிக்கப்படவில்லை. சிலர் விளக்கங்களைக் கூற முற்பட்டபோதும் அது மறுக்கப்பட்டது.

டுபாய் பொலிஸ் பிடியில் தானும் தனது சகாக்களும் சிக்கிய அதிர்ச்சியில் இருந்து மீள மதுஷுக்கு சில நிமிடங்கள் சென்றதாக அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பு இலங்கை பாதுகாப்புத் தரப்பிடம் தெரிவித்துள்ளது.

இப்போது என்ன?

மதுஷ் மற்றும் சகாக்களை மீட்க பல நாடுகளில் இருந்தும் பிரபல சட்ட நிறுவனங்களும் சட்டத்தரணிகளும் முயற்சிகளை எடுத்துள்ளன.

அதற்கிடையில் இவர்களை வெளியில் கொண்டுவர பத்து மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒரு தரப்பு டுபாய் பொலிஸாருக்கு வழங்க முயன்று மாட்டிக்கொண்டிருக்கின்றது.

இதற்கிடையில் டுபாயில் கைதுசெய்யப்பட்ட ஜங்காவின் தந்தையின் சகோதரியின் மகனான விசேட அதிரடிப்படையின் சிப்பாய் ஒருவர் அண்மையில் கைதுசெய்யப்பட்டார் அல்லவா? அவரிடம் இருந்து சீருடைகள் பலவும் மீட்கப்பட்டதே. அவரின் இல்லத்தில் இருந்து பல புத்தகங்கள் மீட்கப்பட்டுள்ளன. நவீன துப்பாக்கிகளை இயக்குவது எப்படி என்பது பற்றி அரபு மொழியில் உள்ள அந்தப் புத்தகம் டுபாயில் இருந்து வந்ததாக அறியப்பட்டுள்ளது. அப்படியானால் அந்த நவீன ஆயுதங்கள் எங்கே என்று தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள நடிகர் ரயன் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட ஒரு பை குறித்து தேடிய இலங்கை எஸ்.ரீ.எவ். அதிலும் பல விடயங்களை அறிந்துள்ளது.

அண்மையில் கொழும்பில் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட அமெரிக்க மற்றும் உக்ரேய்ன் பிரஜைகள் வைத்திருந்த போதைப்பொருள் பையும் ரயன் வீட்டில் மீட்கப்பட்ட பையும் ஒரே அடையாளங்களைக் கொண்டுள்ள அதேசமயம் – அவர்களுடன் நடிகர் ரயன் நுவரெலியாவுக்குச் சென்று வந்துள்ளமையும் அறியப்பட்டுள்ளது.

கொழும்பின் பிரபல கிளப் ஒன்றின் உரிமையாளரின் ஹோட்டல் அது. இந்த டுபாய் நிகழ்வுக்கு இந்தக் கிளப் உரிமையாளரும் செல்லவிருந்த போதிலும் இறுதி நேரத்தில் செல்லவில்லை.

டுபாய் விருந்தில் கலந்துகொண்டு பின்னர் தப்பிச் சென்ற அங்கொட லொக்கா மற்றும் அவரது சகாக்கள் ஆறு பேர் சி.சி.ரி.வி. உதவியுடன் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பல முக்கிய தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன எனச் சொல்லப்படுகின்றது.

மதுஷை நாடு கடத்துவதில் உள்ள முக்கிய பிரச்சினை அவருக்கு இங்கு போதைப்பொருள் வழக்கில் ஏதும் பெரிய தண்டனைகள் வழங்கப்படவில்லை. கொலைக்குற்றச்சாட்டே உள்ளது. ஆனால், சிக்கிய பலர் மீது போதைப்பொருள் வழக்கு உள்ளது. அவர்களை நாடுகடத்துவது குறித்து ஆராயப்படுகின்றது. ஆனால், எல்லாவற்றுக்கும் டுபாயில் ஆரம்பகட்ட விசாரணைகள் முடியவேண்டும். நீதிமன்றம் ஒரு தீர்ப்பைச் சொல்லவேண்டும்.

பல நாடுகளில் உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தக புள்ளிகள் மதுஷ் விடுதலைக்காக தங்களது நாட்டின் ஆதரவுடன் டுபாய் அரசுக்கு அழுத்தத்தை வழங்கினாலும் அவை விழலுக்கிறைத்த நீர் தான். ஏனெனில், டுபாய் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுடன் அமெரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் இணைந்தே செயற்படுகின்றது. எனவே, மேட்டர் கொஞ்சம் சிக்கல் தான்..

இவற்றை விட நாடளாவிய ரீதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி வர்த்தகர்கள் பலர் பொலிஸாரைத் தொடர்புகொண்டு மாதாமாதம் தாங்கள் கப்பம் செலுத்தி வந்ததை விபரித்துள்ளனர் எனச் சொல்லப்படுகின்றது.

“மதுஷ் பெயரில் கப்பம் கேட்பார்கள். மாதாந்தம் ஐந்து முதல் பத்து இலட்சம் ரூபா வரை கொடுத்து வந்துள்ளோம். உயிர்ப்பயம் காரணமாக வெளியில் சொல்லவில்லை.முறையிடவில்லை.” என்று அந்த வர்த்தகர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது..

டுபாயில் சிக்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர் இந்திக்க குமார குறித்தும் தனி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மதுஷின் இரண்டாவது மனைவி பெயரில் இலங்கையில் உள்ள சொத்துக்கள் மற்றும் அவற்றை பராமரிக்கும் பினாமிகள் குறித்தும் பல விபரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்.

எப்படியோ இன்னும் சில தினங்களில் இன்னும் பல தகவல்கள் வெளிவரும் என்று சொல்லப்படுகின்றது.

– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *