பெருந்தோட்டக்கம்பனிகளுக்கான வரி அதிகரிப்பு – கொட்டகலை பிரதேச சபை அதிரடி!!
பெருந்தோட்டக் கம்பனிகளால் பிரதேச சபைக்கு செலுத்தப்படும் வரி மறுசீரமைக்கப்படவுள்ளது என்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.
கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று ( 12) நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” சில பெருந்தோட்ட கம்பனிகள், தேயிலை செடிகளை தொழிலாளர்களுக்கு பராமரிப்பதற்காக உப குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ளன.
இவ்வாறு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேயிலை செடிகளின் பரப்பிற்கு கம்பனிகளால் வசூலிக்கப்படும் வரி ,
கம்பனிகளால் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் வரியை விட இரண்டு மடங்காக காணப்படுகின்றது. இது விடயத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பெருந்தோட்ட நிறுவனங்கள் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் ஏக்கர் வரி, தொழிற்சாலை வரி போன்றன குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன. உள்ளாட்சிமன்றங்களின் சட்டவிதிமுறைகளுக்கமைய கட்டணம் செலுத்தப்படவில்லை.
இதனால், தோட்டங்கள் பிரதேச சபைகளுக்கு செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான விடயங்களை மறுபரிசீலனை செய்து முறையான வரி வசூலிப்பு முறையை அறிமுகப்படுத்தவேண்டியுள்ளது.
அத்துடன், பெருந்தோட்ட மக்களின் பல அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு பிரதேச சபையின் நிதியும், மக்கள் பிரதிநிதிகளினால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியும் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
எதிர்காலத்தில் தோட்ட கம்பனிகள் மூலம் அறவிடப்படும் நிதியையும் தோட்டங்களில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்த முடியும்.” என்றும் ராஜமணி பிரசாந்த் குறிப்பிட்டார்.
க.கிசாந்தன்