தாமரை மொட்டிலிருந்தே ஜனாதிபதி வேட்பாளர்!

பொதுஜன முன்னணியின் உறுப்பினரையே,  ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவோம் என்றும் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று கம்பஹா மாவட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தில், சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி  தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடுவார் என்று கூறிவருவது தொடர்பாக, பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தமது கவலையை எழுப்பியிருந்தனர்.

எந்தவொரு சூழ்நிலையிலும், பொதுஜன முன்னணி உறுப்பினர் அல்லாத வேட்பாளரை ஆதரிக்கமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவது, வாக்காளர்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும்,

அதனை ஏனைய அரசியல் கட்சிகள் தமது நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் பதிலளித்துப் பேசிய பசில் ராஜபக்ச,

“கட்சிக்கு முன்னுரிமை வழங்கப்படும். அத்துடன் கட்சி உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாது.

சிறிலங்கா பொதுஜன முன்னணியி கிராமங்களில் இருந்தே கட்டியெழுப்பப்பட்டது. கட்சியில் தலைவர்கள் உருவாக முன்னரே, வாக்காளர்களால் கட்டியெழுப்பப்பட்ட

அரசியல் கட்சி இது. எனவே கட்சியின் முடிவுகள் அனைத்தும் உறுப்பினர்களின் விருப்பத்துக்கு அமையவே எடுக்கப்படும்.

கட்சியின் தலைவர்களை விட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு கட்சியாக சிறிலங்கா பொதுஜன முன்னணி தொடர்ந்து செயற்படும். வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், உறுப்பினர்களுக்கு துரோகம் செய்யாமலும் இந்தக் கட்சி செயற்படும்.

உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்படாத எவருக்கும் ஆதரவு அளிக்குமாறு சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களிடம், கட்சித் தலைவமை ஒருபோதும் கேட்காது.

எனவே, அடுத்த அதிபர் வேட்பாளர் எமது கட்சியைச் சேர்ந்தவராகத் தான் இருக்க முடியும் என்று உறுதிப்படுத்துகிறேன். நாங்கள் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவோம்.” என்று உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *