“மோடி திரும்பிப் போ!” – ஆந்திராவில் போராட்டம்

ஆந்திராவில் மோடிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவில் அரசு நலத்திட்டங்களைத் தொடக்கி வைக்க விஜயவாடாவுக்கு விமானம் மூலம் வந்தார். பின்னர் அங்கிருந்து அவர் விமானப்படை சிறப்பு ஹெலிகொப்டர் மூலம் குண்டூர் சென்றார்.

அங்கு நடந்த விழாவில், பெற்றோலியம் எரிவாயு திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்.

பின்னர் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில்,

‘‘சந்திரபாபு நாயுடு என்னை விட அரசியலில் மூத்தவர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதே சமயம் கட்சி விட்டு கட்சி தாவுவதிலும் அவர் தான் அனைவருக்கும் மூத்தவர்.

சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக திட்டமிட்ட நிதியை விட கூடுதலாக ஆந்திராவுக்கு மத்திய அரசு வழங்கியது.

ஆனால், இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு அதை முறையாகப் பயன்படுத்தவில்லை’’ என்று குற்றம்சாட்டினார்.

முன்னதாக விஜயவாடா விமான நிலையத்துக்கு வந்த மோடியை, ஆந்திர மந்திரிகள் யாரும் சென்று மரியாதை நிமித்தமாக வரவேற்கவில்லை.

மேலும் விஜயவாடா, குண்டூர் உட்பட பல இடங்களில் மோடிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் கறுப்பு சட்டை அணிந்து, கறுப்புக் கொடியுடன் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் “மோடி திரும்பிப் போ” எனக் கோ‌ஷமிட்டனர்.

இதேபோல் கம்யூனிஸ்டு கட்சியினரும் மோடிக்கு எதிராக கறுப்புக் கொடிப் போராட்டம் நடத்தினர்.

மோடியின் வருகையை கறுப்புத் தினம் என காங்கிரஸ் கட்சி வர்ணித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *