ஆண்குறி குறித்த பெண் எம்.பியின் சர்ச்சைப் பேச்சு

தங்கள் ஆண்குறியின் நுனித்தோலை ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அகற்றியுள்ளார்களா இல்லையா என்று சோதனை செய்யப்பட வேண்டும் என்று தான்சானியாவில் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆண்குறியின் நுனித் தோல் நீக்கப்பட்டால் (விருத்த சேதனம்) எச்.ஐ.வி நோய்த்தொற்று பரவுவது குறையும்.

ஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்குவது எச்.ஐ.வி பரவும் வாய்ப்பை சுமார் 60% அளவுக்கு குறைக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆண்குறியின் நுனித்தோலை அகற்றாத ஆண் உறுப்பினர்கள் உடனடியாக அந்த செய்முறைக்கு உள்ளாக வேண்டும் என்று ஜேக்லைன் நோங்யானி எனும் பெண் உறுப்பினர் வலியுறுத்தியுள்ளது, ஒரு சேர ஆதரவு மற்றும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

எச்.ஐ.வி பரவலை கட்டுப்படுத்துவது குறித்த நாடாளுமன்ற விவாதத்தின்போதே ஜேக்லைன் நோங்யானி மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ஜேக்லைன் கூறியது அறுவறுப்பானது என்றும் பிறரின் அந்தரங்க உரிமையில் தலையிடுவது என்றும் ஜோசஃப் கசேகு எனும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

பல ஆப்பிரிக்க நாடுகளும் எச்.ஐ.வி கிருமி பரவுவதைத் தடுக்க ஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல் தோலை அகற்ற பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

தான்சானியாவின் அண்டை நாடான கென்யாவில் இந்த செய்முறையை ஊக்குவிக்கும் நோக்கில், 2008ஆம் ஆண்டு பல முன்னணி அரசியல்வாதிகள் தாங்களாக முன்வந்து இந்த செய்முறைக்கு ஆளாகினர்.

உலகெங்கும் மதச் சடங்குகளுக்காகவும், மருத்துவக் காரணங்களுக்காகவும் ஆண்கள் விருத்த சேதனம் செய்துகொள்ளும் வழக்கம் உள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *