இராணுவத்திடம் கையளித்த உறவுகளுக்கு நடந்தது என்ன? – நீதி கோரி யாழில் போராட்டம்

காணாமல்போனோருக்குப் பதில் கூற வலியுறுத்தி காணாமல்போனோர்களின் உறவுகள் கறுப்புத் துணியால் வாயைக் கட்டியும் விளக்கேற்றியும் தமது உறவுகளைத் தேடி இன்று போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

சமூக வலைத்தளங்களின் நண்பர்களின் ஏற்பாட்டில் இன்று (09) காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“மக்கள் பிரதிநிதிகளே எமது கண்ணீர் உங்களுக்கு வெறும் தண்ணீரா?”, “இலங்கையின் இறையாண்மையும் எனது மகனும் ஒன்றா?”, “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நீதி என்ன?”, “இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன?” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு காணாமல்போனோர்களின் உறவுகள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இருந்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்ற போது, ஆளுநரின் அலுவலகத்துக்குள் செல்ல பொலிஸார் அனுமதி மறுத்த நிலையில், 5 பேர் சென்று ஆளுநரின் மக்கள் தொடர்பு அலுவலகரிடம் ஜனாதிபதிக்கான மகஜரைக் கையளித்தனர்.

இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இருவர் மீதும் திருப்தி அற்ற நிலையில் காணாமல்போன உறவுகள், ஆக்ரோஷமான வார்த்தைகளால், திட்டி தமது வேதனையையும் வெளிப்படுத்தினார்கள்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *