ஸ்ரீதர் தியேட்டர் மின்சார நிலுவை விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுப்பேன்! – அமைச்சர் ரவி தெரிவிப்பு

ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் அலுவலகமாக இயங்கும் ஸ்ரீதர் தியேட்டர் மற்றும் ஊடக நிறுவனங்கள் இயங்கிய கட்டடங்கள் என்பவற்றுக்காக செலுத்தவேண்டிய மின்சார நிலுவை தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீதர் தியேட்டருக்கு 1998ஆம் ஆண்டிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதுவரை 85 இலட்சத்து 50 ஆயிரத்து 982 ரூபா 75 சதம் மின்சார சபைக்குச் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரையே மின்சார சபைக்கு பணம் செலுத்தப்படவில்லை. அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத்தில் இயங்கிய அலுவலகம், பஸ்தியன் சந்தியில் இயங்கிய அலுவலகம், யாழ்ப்பாண நகரில் காங்சேன்துறை வீதியில் இயங்கிய அலுவலகம் ஆகியவற்றுக்கும் மின்சார விநியோகம் வழங்கப்பட்டிருந்தது. அதற்குரிய நிலுவைப் பணமும் செலுத்தப்படவில்லை.

ஆனாலும், மின்சார சபை அதிகாரிகள் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கேட்டபோது,

“நாடாளுமன்ற உறுப்பினர், சாதாரண பொதுமக்கள் என்ற வேறுபாடு இல்லை. சகலருக்கும் ஒரே மாதிரியாகவே சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மின்சார நிலுவை தொடர்பில் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *