பால்மாவில் பன்றி கொழுப்பு ? சபையில் இன்றும் சர்ச்சை!

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றி கொழுப்பு கலந்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி, உண்மையை கண்டறிவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்குமாறு இன்றைய தினமும் (08) சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பிரதியமைச்சர் புத்திக்க பத்திரண, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ ஆகியோரே மேற்படி கோரிக்கையை விடுத்தனர்.
நாடாளுமன்றம் இன்று ( 08) முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.
சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுதாக்கல், வாய்மூலவிடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்த பின்னர்,
ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய பிரதியமைச்சர் புத்திக்க பத்திரன,
” பால்மாவில் பன்றி கொழுப்பு கலந்துள்ளது என முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அது பொய்யென சுகாதார அமைச்சர் நேற்று நிராகரித்துவிட்டார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் பொய்யுரைப்பவன் கிடையாது. நுகர்வோர் அதிகார சபைத் தலைவர்கூட மிரட்டப்பட்டுள்ளார். பால்மா நிறுவனமொன்று முந்தியடித்துக்கொண்டு, அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதுமட்மல்ல சுகாதார அமைச்சில் இருந்த அதிகாரியொருவர், ஓய்வுபெற்ற  பிறகு பால்மா நிறுவனத்தில் பணிபுரிகின்றார். சிலவேளை, அதிகாரிகளால் சுகாதார அமைச்சருக்கு போலியான தகவல்கள் வழங்கப்பட்டிருக்கலாம்.
எனவே, இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு உடனடியாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு கோருகின்றேன்.” எ ன்று குறிப்பிட்டார்.
விமல்வீரவன்ஸ எம்.பியும் மேற்படி கோரிக்கையை விடுத்தார்.

அதேவேளை, நுகர்வோர் அதிகாரசபைத் தலைவரை அழைத்து இது தொடர்பில் ஆராயுமாறு சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியல்ல, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை சபையில்
ஏற்பட்ட சர்ச்சை

வெளிநாடொன்றிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றி கொழுப்பும் , தாவர எண்ணெய்யும் கலக்கப்பட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சின் பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரனவினால் கூறப்பட்டதையடுத்து அது தொடர்பாக சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

இதன்போது இந்த விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தியதுடன் நாட்டு மக்களுக்கு நஞ்சை கொடுப்பதற்கு அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது பால் மா நிறுவனங்கள் வரிகளை அதிகரிப்பதற்கான விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாகவும் நாட்டில் பால் மாவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தொடர்பாகவும்

ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினரினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரனவினால் இவ்வாறாக தெரிவிக்கப்பட்டது.

பால் மா நிறுவனங்களில் கோரிக்கையால் நாட்டில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தேசிய பால் மா உற்பத்தியின் வரியை குறைத்தாவது இந்த தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண நடவடிக்கையெடுக்கப்படுமா? என விஜித ஹேரத் எம்.பி கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன தெரிவிக்கையில்,

பால் மா நிறுவனங்கள் அடிக்கடி விலை அதிகரிப்புக்கு கோரிக்கை விடுத்து வருகின்றது.

பால் மா நிறுவனமொன்றின் உயர் அதிகாரியொருவர் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் அது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எவ்வாறாயினும் நாங்கள் இது வரை அது தொடர்பாக தீர்மானம் எடுக்கவில்லை. அடுத்த வாரத்தில் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு கூடியதும் இது தொடர்பாக ஆழமான தீர்மானம் எடுக்கப்படும். அது வரையில் அந்த நிறுவனங்களின் தாளத்திற்கு எமது அமைச்சோ , நுகர்வோர் அதிகார சபையோ ஆடுவதற்கு தயாராக இல்லை.

இதேவேளை நுகர்வோர் அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சில பால் மா நிறுவனங்கள் பால் மா என்ற பெயரில் இலங்கைக்கு கொண்டு வரும் பொருட்களில் பன்றி கொழுப்பே இருப்பதாக கூறப்படுகின்றது.

லக்டோ மற்றும் மரக்கறி எண்ணெய்யை கலந்து பால் மாவாக கொண்டு வருவதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளன. நியூசிலாந்திலிருந்து மட்டும் எனவும் கூறலாம்.

குறிப்பாக கன்று ஈன்ற பசுக்களில் இருந்தோ பால் எடுக்க முடியும். இவ்வாறான நிலைமையில் நியூசிலாந்தில் தற்போது பிறக்கும் கன்றுகள் முதல் இறப்பதற்கு இருக்கும் பசுக்கள் மற்றும் மாடுகள்

வரையும்  பால் சுரக்குமாக இருந்தாலும் இந்த நாட்டுக்கு ஒரு வருடத்திற்கு கொண்டு வரும் அளவுக்கு பால் மாவை உற்பத்தி செய்ய முடியாது என்றே இந்த அறிக்கைகள் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது.

இதன்படி லக்டோ மற்றும் பன்றி கொழும்பும் அத்துடன் லக்டோவும் , மரக்கறி எண்ணெய்யும் கலந்து செய்யும் ஒரு வகை தூளையே நாங்கள் பால் மாவாக குடிப்பதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக வயம்ப பல்கலைக்கழகத்தினால் செய்யப்பட்ட ஆய்வு அறிக்கை கிடைத்துள்ளது.

1991ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சராக இருந்த ரோணுகா ஹேரத் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் பால் மா என்பது ஒன்று பசுவிடம் இருந்தோ அல்லது எருதுவிடமிருந்தோ பெற்றுக்கொள்ளப்பட்ட பாலினூடாக உருவானதாக இருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் இது உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால் பாரதூரமான பிரச்சினையாக அது அமையும்.

இதேவேளை நுகர்வோர் அதிகார சபை பணம் செலுத்தி இது தொடர்பாக ஆராயும்  பொறுப்பை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கியிருந்தது.

பால் மா மாதிரியை பெற்று அதற்காக வழங்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த நிறுவனம் அந்த பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால் 2 , 3 வாரங்களில் அந்த நிறுவனம் தங்களால் ஆய்வு செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.

இதன்படி எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆய்வு செய்யும் நிறுவனத்திற்கு இலஞ்சம் வழங்கி இந்த ஆய்வுகள் மூடி மறைக்கப்பட்டதா என்ற சந்தேகம் இருக்கின்றது. இதனால் வெளிநாட்டிடம் இது தொடர்பான ஆய்வுக்காக ஒப்படைக்க எதிர்பார்த்துள்ளோம்.

சிகரட் கம்பனி மற்றும் புகையிலை உற்பத்தி நிறுவனமும் இவ்வாறாக செயற்படும் போது ராஜித சேனாரட்ன இது தொடர்பாக நடவடிக்கையெடுத்திருந்தார்.

அதேபோன்று நாங்களும் நடவடிக்கையெடுப்போம். இது தொடர்பாக எதிர்வரும் 2 , 3 வாரங்களில் முடிவொன்றை பார்க்க முடியும். எவ்வாறாயினும் பால் மா என்று வேறு எதாவது வழங்கப்பட்டிருந்தால் அது தொடர்பாக பார்க்கவேண்டியும் வரும். என்றார்.

பிரதி அமைச்சரினால் பால் மா தொடர்பாக வெளியிடப்பட்ட இவ்வாறான கருத்துக்களை தொடர்ந்து அது தொடர்பாக சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் பிரதி அமைச்சரிம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தினர்.

சந்திம வீரக்கொடி

இவ்வேளையில் தனது கருத்தை முன்வைத்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சந்திம வீரக்கொடி தெரிவிக்கையில்,

பிரதி அமைச்சர் நாட்டுக்கே பாதிப்பான விடயமொன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக மக்களிடையே அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பன்றி கொழுப்பையா அருந்த கொடுக்கின்றோம். என்ற பிரச்சினை எழுந்துள்ளது.

எங்களுக்கு 10 மாதங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமாக இருக்கும். எவ்வாறாயினும் இந்த அரசாங்கத்தினால் இந்த பிரச்சினைக்கு எப்போது தீர்வு காணப்படும் என கேட்கின்றேன். என்றார்.

மரிக்கார்

இவரை தொடர்ந்து தனது கருத்தை முன்வைத்த ஐக்கிய தேசிய கட்சி எம்.பியான மரிக்கார் தெரிவிக்கையில்,

பிரதி அமைச்சரின் இந்த கருத்தை தொடர்ந்து இந்த நாட்டின் முஸ்லிம் மக்களுக்கு பாரிய பிரச்சினை ஏற்படும். வெளிநாட்டிலிருந்து கொண்டு வரும் பால் மாவில் பன்றி கொழுப்பா இருக்கின்றது. என்ற சந்தேகம் ஏற்படும்.

இதன்படி முஸ்லிம்களுக்கு இதனை பயன்படுத்துவது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்படுவது போன்று இருக்கின்றது. இது சாதாரண பிரச்சினையல்ல. இவ்வாறாக இறக்குமதி செய்யும் நிறுவனம் என்னவென கூறவேண்டும். என்றார்.

இதனை தொடர்ந்து மீண்டும் பதிலளித்த பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன , எனக்கும்  இந்த சபையில் இந்த பிரச்சினையை எழுப்ப வேண்டுமென்பதாகவே இருந்தது. அதன்படி நடந்துள்ளது.

அதாவது நுகர்வோர் அதிகார சபையினால் மாதிரியை எடுத்து ஆய்வுக்காக குறித்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட போதும் அந்த ஆய்வு செய்யப்படவில்லை. இதனால் வெளிநாட்டின் உதவியுடன் இந்த ஆய்வை செய்ய வேண்டியுள்ளது.

இது தொடர்பாக மக்களுக்கு அச்ச நிலைமை ஏற்படும். இதனால் வெளிநாட்டிலாவது இது தொடர்பாக ஆய்வை செய்ய வேண்டும். இதேவேளை சுகாதார அமைச்சின் முன்னாள் அதிகாரிகள் சலுகை பொதிகளுடன் 3மில்லியன் , 4 மில்லியன் என்ற அடிப்படையில் சம்பளத்துடன் பால் மா நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

நுகர்வோர்  அதிகார சபையினர் நாளை (இன்று) ஆவணங்களுடன் என்னை சந்திக்கவுள்ளனர். இதன்படி ஆய்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். என்றார்.

இதன்போது சபைக்கு தலைமைதாங்கிய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இது தொடர்பான தெளிவான விளக்கத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பியுங்கள் என பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரனவை பார்த்து கூறினார்.

நாமல் ராஜபக்‌ஷ

இதனை தொடர்ந்து தனது கருத்தை முன்வைத்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ ,பிரதி அமைச்சரின் கருத்தை பார்க்கும் போது இந்த விடயத்திற்கு பின்னால் ஏதோவொன்று இருக்கின்றது. என்பதனை புரிந்துக்கொள்ள முடியுமாக இருக்கின்றது.

இவ்வாறாக அவர் கூறுவாராக இருந்தால் பால் மாவை பயன்படுத்துவது தொடர்பாக பாரிய பிரச்சினை இருக்கின்றது. இதனால் இது தொடர்பான அறிக்கை வரும் வரை ஏதேனும் சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்பதுடன் பொறுப்புடன் தமது கருத்தையும் கூற வேண்டும்.

தெளிவான நிலைப்பாட்டுக்கு இப்போதே வர முடியாது என்றால் இது தொடர்பான ஆய்வு முடியும் வரை இந்த பால்மா வை குடிக்க வேண்டாமென்றோ அல்லது தடையுத்தரவை பெற்றுக்கொள்ளவோ நடவடிக்கையெடுக்க வேண்டும். இது தப்பிக்கக் கூடிய கருத்து அல்ல என்றார்.

விமல் வீரவன்ச

இவரை தொடர்ந்து தனது கருத்தை முன்வைத்த விமல் வீரவன்ச கூறுகையில்,

பிரதி அமைச்சருக்கு நன்றியை கூறிக்கொள்கின்றேன். இந்த நாட்டின் கல்விமான்கள் குறித்த பால் மாவின் மாதிரியை பெற்று பிரித்தானிய ஆய்வு நிலையத்தில் அது தொடர்பாக ஆய்வு செய்து நாட்டுக்கு வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் அந்த நிறுவனம் அந்த கல்விமான்களுக்கு எதிராக நீதிமன்றத்திற்கும் சென்றிருந்தன. இதன்படி இந்த விடயத்தில் வரலாற்று செயற்பாடுகளும் இருக்கின்றன.

இந்த பால் மா நிறுவனத்திற்கு வரிச் சலுகை வழங்கி அங்கிருந்து பன்றி கொழுப்பை கொண்டு வர இடமளித்து அதனை மக்கள் குடிப்பார்களாக இருந்தால் அது நாட்டு மக்களின் சுகாதாரம் தொடர்பான பிரச்சினையாகும். இதனால் ஆய்வுகளை சரியாக செய்யுங்கள். இதற்காக நாங்கள் ஆதரவை வழங்குவோம். என்றார்.

விஜித முனி சொய்சா

இதேவேளை ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான விஜித் விஜித முனி சொய்சா தனது கருத்தை முன்வைத்து தெரிவிக்கையில்,

நான் முன்னாள் அமைச்சர் என்ற ரீதியில் எனக்கு தெரியும். இந்த பால் மாவில் பால் இல்லை. மா மட்டுமே இருக்கின்றது. பன்றி கொழும்பு , தாவர எண்ணெய்  , மெலமைட் உள்ளிட்டவை அடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அது தொடர்பான நிறுவனத்தின் பெயரையும் கூற முடியும். இவ்வாறாக இங்கு பால் குடிக்கும் பிள்ளைகளுக்கும் மற்றும் பால் கொடுக்கும் அம்மாக்களுக்கும் நஞ்சே கொடுக்கப்படுகின்றது. என்றார்.

இதனை தொடர்ந்து மீண்டும் பதிலளித்து உரையாற்றிய பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன தெரிவிக்கையில்,

நான் பிரதி அமைச்சராகவே பேசுகின்றேன். நான் மிகவும் பொறுப்புடனும் பேசுகின்றேன். மகிந்த ராஜபக்‌ஷ காலத்தில் மெலமைன் பிரச்சினை ஏற்பட்டது.

அப்போது பால் மா நிறுவனங்கள் மிகவும் கீழ்த்தரமாகவும் , தான் தோன்றித்தனமாகவும் நடந்துக்கொண்டது. நியூசிலாந்து இராஜதந்திரிகளும் இந்த வியடத்தில் தலையிட்டனர்.

இங்கு உற்பத்தி செய்யும் பால் மாவில் இந்த பிரச்சினை கிடையாது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும். பால் மாவிலே இந்த பிரச்சினை இருக்கின்றது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகுவதில்லை. விளம்பரங்கள் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதால் அது வெளி வருவதில்லை.

இது தொடர்பான வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வும் , பிரித்தானியா நிறுவனத்தின் ஆய்வின் அறிக்கையும் இருக்கின்றது. இதன்படியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக இலங்கையில் ஆய்வு செய்ய முடியாவிட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்திலாவது இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வோம். தேசத்திற்கு நஞ்சை கொடுக்க இடமளிக்க முடியாது. என்பதனால் இதற்காக நான் எது இல்லாது போனாலும் நான் போராடுவேன். என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *