ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிலும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக!

பத்தனை, ஶ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வை பெற்றுதருமாறு கோரியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோருக்கு இன்று ( 07) கடிதம் அனுப்பியுள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான வேலுகுமார்.

ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியின் சமையலறை அசுத்தம் காரணமாக கடந்த 05 ஆம் திகதி ‘சீல்’ வைக்கப்பட்டது. அத்துடன், பதிவாளர் உட்பட சில உத்தியோகத்தர் கல்லூரியின் அலுவலகத்துக்குள்ளேயே மது அருந்துவது தொடர்பில் காணொளியும் அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து சுத்தமான உணவு வேண்டும் என கோரியும், ஒழுக்க விழுமியங்களைமீறும் வகையில் கல்லூரிக்குள் மது அருந்திய அதிகாரிகளை இடைநிறுத்துமாறு வலியுறுத்திலும் ஆசிரியர் பயிலுநர்கள் வகுப்பு பறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையிலேயே, ஆசிரியர் பயிலுநர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறுகோரி வேலுகுமார் எம்.பியால் பிரதமருக்கும், கல்வி அமைச்சருக்கும் அவசர கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட வேலுகுமார் எம்.பி., கூறியவை வருமாறு,

‘’  சுகாதாரமான உணவு இன்மையால் ஆசிரியர் பயிலுநர்கள் அண்மைக்காலமாக  அடிக்கடி நோய்வாய்ப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. இருந்தும், சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாணவர்களின் ( ஆசிரியர் பயிலுநர்கள்) கோரிக்கைகள் நியாயமானவை. கல்லுரி அலுவலகத்துக்குள் எவ்வாறு குடித்து கும்மாலமடிப்பது? பொறுப்புவாய்ந்த பதவியிலுள்ள பதிவாளரே இவ்வாறு செயற்படுவதை எந்தவொரு வகையிலும் அனுமதிக்கமுடியாது.

குறித்த கல்லூரி ஆரம்பமானது முதல் இற்றைவரை மேற்கூறப்படும் நபரே பதிவாளராக செயற்பட்டுவருவதால், முழு நிர்வாகமும் அவர் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது என மாணவர்களின் பெற்றோர் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

அத்துடன், வீடியோ ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக இன்னும் குறைந்தப்பட்ச நடவடிக்கைகூட எடுக்கபடாமை வேதனைக்குரிய விடயமாகும்.

இந்நிலையில், கல்லூரிக்குள் தமிழ், சிங்களப் பிரச்சினையை உருவாக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுவதாகவும், வீடியோக்களை அம்பலப்படுத்தியதால் தாம் பழிவாங்கப்படுவதாகவும் மாணவர்கள் என்னிடம் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், கல்லூரியியல் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் பிரதமர், கல்வி அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

எனவே, இவ்விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிடும். அதற்குரிய அழுத்தங்களை நாம் பிரயோகிப்போம்.

மலையகத்துக்கென பல்கலைக்கழகமொன்று இல்லை. இருந்தாலும் இத்தகைய கல்லூரிகளே கல்வி வளர்ச்சிக்கு பெரும் பக்கபலமாக இருக்கின்றது. அவற்றையும் சீரழிப்பதற்கு இடமளிக்கமுடியாது. என்றும் நாம் நீதியின் பக்கம் நிற்போம்.’’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *