57,000 பட்டதாரிகளையும் ஒரேயடியாக அரச சேவைக்குள் இணைக்கவேண்டும்! – மஹிந்த வலியுறுத்து

வேலையற்ற பட்டதாரிகள் 57 ஆயிரம் பேரையும் ஒரே தடவையில் அரச சேவைக்குள் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

தனது பதவிக் காலமான 2012ஆம் ஆண்டு 48 ஆயிரம் பட்டதாரிகளை எந்தவொரு வேறுபடுத்தலுமின்றி அரச
சேவைக்குள் இணைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை சுதந்திரமடைந்து 71 ஆண்டுகளாகின்றன. அதேபோன்று இந்த நாட்டில் சுதந்திரமான கல்வியைத் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டும் 71 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

தற்போது நாட்டில் பல இலட்சம் பேர் வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில் உள்ளனர். அவர்களில் 57 ஆயிரம் பட்டதாரிகளும் அடங்குவர்.

2012ஆம் ஆண்டு 48 ஆயிரம் பட்டதாரிகள் ஒரே தடவையில் அரச சேவைக்குள் உள்வாங்கப்பட்டனர். அதன்போது பட்டதாரிகள் உள்வாரி, வெளிவாரி எனவோ வயது எல்லையின் அடிப்படையிலோ பாகுபடுத்தப்படவில்லை. அனைவருமே அரச சேவைக்குள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

அனைத்துப் பட்டதாரிகளும் அரச சேவைக்குள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று தற்போதைய அரசால் உறுதியளிக்கப்பட்டது.

சுமார் 50 ஆயிரம் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு நேர்முகப் பரீட்சையும் நடத்தப்பட்டது. எனினும் 5 ஆயிரத்து 100 பட்டதாரிகள் மட்டுமே அரச சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். எனவே, தற்போது நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள 57 ஆயிரம் பட்டதாரிகளையும் எந்தவொரு நிபந்தைகளையும் விதிக்காமல் அரச சேவைக்குள் இணைக்கவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *