தேசிய அரசமைக்கும் யோசனைக்கு வேலுகுமார் எம்.பி. போர்க்கொடி!

“அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை மட்டும் நோக்காகக்கொண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமானால் அதற்கு ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம்.” –
என்று ஜனநாயக  மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்.பியுமான வேலுகுமார் தெரிவித்தார்.

தேசிய அரசாங்கம் அமைக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் உத்தேச திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே வேலுகுமார் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை  வருமாறு,
‘’ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்து இதற்கு முன்னர் தேசிய அரசாங்கம் அமைத்தன. தமிழ் முற்போக்கு கூட்டணியும் அதில் பங்காளிக்கட்சியாக அங்கம் வகித்தது.
மாறுபட்ட கொள்கைகளைக் கடைபிடிக்கும் இரண்டு பிரதானக் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்ததால் அதன் ஆயுட்காலம் உரிய வகையில் நீடிக்கவில்லை. சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே ஆட்சியை கொண்டு நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.
19 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதை மட்டுமே பாரிய வெற்றியாக கருதலாம். மற்றும்படி எந்த நோக்கத்துக்காக  தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதோ அந்த இலக்கை நோக்கி அது நகரவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
தேசிய அரசாங்கம் தொடர்பில் நாம் சிறந்த பாடத்தை கற்றுக் கொண்டுள்ளோம். எனவே, மீண்டும் அவ்வாறானதொரு கட்டத்துக்கு  செல்வதாக இருந்தால் அகம், புறம் என அனைத்து விடயங்களையும் அலசி ஆராய்ந்துவிட்டே முடிவொன்றை எடுக்கவேண்டும்.
குறிப்பாக நிலையானதொரு அரசாங்கத்தை அமைக்கவும், புதிய அரசியலமைப்பை உருவாக்கவும், பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்காகவும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமானால்,  நாட்டின் நலனைக்கருதி அதற்கு ஆதரவு வழங்கலாம்.
மாறாக தனி நபர்களை திருப்திப்படுத்துவதற்காகவும், அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுமானால் அதற்கு  ஆதரவாக செயற்படமுடியாது. அது மக்கள்  வழங்கிய ஆணையை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
அதே வேளை, ஐக்கிய தேசியக்கட்சி எதை செய்தாலும் அதற்கு போர்க் கொடி தூக்கும் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கிறார்.
எனவே, சுதந்திரக்கட்சி உறுப்பினர்களின் ஆதரவை எப்படி பெறுவது? தாமாக முன்வந்து சில உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினாலும் அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி இறங்கக்கூடும். இதனால், மீண்டும் குழப்பநிலை உருவாகக்கூடும்.
இப்படியே ஆட்சியை கொண்டு நடத்த முடியாது. ஆகவே, ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசியக்கட்சி அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மக்கள் தம்பக்கமே உள்ளனர் என்பதை மாகாணசபைத் தேர்தல் ஊடாக நிரூபிக்கவேண்டும். அப்போதுதான் அடுத்தக்கட்டம் நோக்கி தடங்கல்கள்இன்றி நகரலாம்.’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *