மைத்திரி ‘ஒப்பரேஷன்’ ! மாக்கந்துர மதுஷ் எப்படி சிக்கினார்?

மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களை கைது செய்யும் திட்டம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல.

ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பான செய்திகளில் மதுஸூம் சம்பந்தப்பட்டதால் அப்போதே விசேட அதிரடிப்படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்பிடம் இந்த பணியை இரகசியமாக ஒப்படைத்தார் மைத்திரி.

அதன் தொடர்ச்சியாகவே , நீண்ட வலையமைப்பை கண்காணித்து அந்த கோஷ்டிக்குள்ளே தமது ஆளை அனுப்பி இந்த கோஷ்டியை கூண்டோடு கைது செய்துள்ளது எஸ் ரீ எப்.

ஜனாதிபதியின் நேரடி பணிப்புரை என்பதால் இந்த திட்டம் இரகசியமாகவே நடந்துள்ளது. பொலிஸ் மா அதிபருக்கு கூட தெரியவில்லை. சொல்லப்படவில்லை.

விசேட பயிற்சி பெற்ற இரண்டு வீரர்கள் சில மாதங்களுக்கு முன்னரே டுபாய் சென்று மதுஷ் கோஷ்டியுடன் உறவாட ஆரம்பித்தனர். அவர்களே அங்கிருந்து கண்காணித்து தருணம் பார்த்திருந்தனர் .

தனது ஓய்வு பெறும் தினத்தன்று இதனை ஜனாதிபதியிடம் நேரடியாகவே லத்தீப் விளக்கி – மதுஷ் கோஷ்டி கைது செய்யப்பட்டால் அவர்களை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்கள் வரலாம் என்பதையும் சுட்டிக்காட்டியதாக தகவல்…

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் டுபாயுடன் செய்து கொள்ளாத காரணத்தினால் இவர்களை கொண்டுவருவதில் சிக்கல் என்று அவர் சுட்டிக்காட்டினாலும் –

இராஜதந்திர ரீதியில் அவற்றை செய்யலாம் என்று கூறி முன்வைத்த காலை பின்வைக்கவேண்டாமென லத்தீப்பை உற்சாகப்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி…

அதேபோல் லத்தீப்பின் பதவிக்காலத்தை நீடிக்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்…

பின்னரே திகில் சம்பவங்கள்…

இதன் பின்னர் டுபாய் மற்றும் அபுதாபி உயர்மட்ட பொலிஸாருக்கு அறிவித்து இந்த ஒப்பரேஷன் ஆரம்பமானது…போதைப்பொருள் தடுக்கும் இலங்கை நார்கோட்டிக் பொலிஸாரும் அறிவுறுத்தப்பட்டனர்.

ஐந்து நட்சத்திர ஹோட்டலை மிக இரகசியமாக சுற்றிவளைத்த பொலிஸ் குழு 5 ஆம் திகதி நேற்று அதிகாலை அவர்களை கைது செய்தது.

சிலசமயம் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றால் மயக்க ஊசிகளை அவர்கள் மீது செலுத்துவது ( துப்பாக்கி சுடுவது போல் மயக்க ஊசிகளை தூர இருந்து ஒரு உபகரணத்தால் பாய்ச்சுவது ) என்றும் திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்..

அதிரடியாக உள்ளே நுழைந்த அதிகாரிகள் அனைவரையும் வளைத்து ஒரு அறைக்குள் அடைத்தனர். அனைவரும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. எல்லோரும் தனித்தனியாக படமெடுக்கப்பட்டனர்.இலங்கைக்கும் இதுபற்றி அறிவிக்கப்பட்டது.

அங்கிருந்தவர்கள் தன்னிலை விளக்கம் அளிக்க முற்பட்ட போதும் பொலிஸ் அதை ஏற்கவில்லை. மதுஷ் உட்பட்ட பலர் போலி கடவுசீட்டுக்கள் போலி விசாக்கள் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கொக்கெய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டது. தனியாக நடத்தப்பட்ட சோதனையில் மதுஷ் மது அருந்தியிருந்தமை அறியப்பட்டது. ஏனைய சிலர் கொக்கெய்ன் போதை பாவித்திருந்தனர் என கண்டறியப்பட்டது…

அனைவரையும் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது..

இப்போது ?

இப்போது மதுஷ் கைது அரசியலில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும் போல தெரிகிறது.

போதைப்பொருள் விடயத்தில் கடும் நிலைப்பாட்டில் உள்ள ஜனாதிபதி , மதுஷ் கோஷ்டியை இலங்கைக்கு கொண்டு வந்தால் அவருக்கு சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது…

ஆனால் பிரதமரோ இன்று பாராளுமன்றத்தில் செய்த அறிவிப்பில் , மதுஷ் மீது அந்நாட்டு சட்டம் பாயுமென தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மதுஷ் கோஷ்டியை கொண்டுவருவதன் மூலம் அவர்களிடம் இருந்து மேலும் பல தகவல்களை பெற்று அவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார் என்பதை கண்டறிய ஜனாதிபதி ஆவலாக இருப்பதாக சொல்லப்படுகிறது..

மறுபுறம் மதுஷ் மற்றும் சகபாடிகளை கொண்டுவர வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பமைச்சும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.

அதேசமயம் -உள்ளூர் அரசியல் பிரமுகர் இருவர் இதில் சிக்கியுள்ளனரா ? சிக்கிய டிப்ளோமட்டிக் பாஸ்போர்ட் யாருடையது?

இந்த பிறந்த நாள் நிகழ்வுக்கு இலங்கையில் இருந்து செல்லவிருந்த இலங்கையின் முக்கிய அரசியல் புள்ளி யார் ? என்பதை பற்றியும் சில விபரங்கள் ஜனாதிபதியின் கைகளுக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த விடயத்தில் ஜனாதிபதி எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பிரதமருடன் அரசியல் ரீதியில் மீண்டும் மோதலை ஏற்படுத்தும் என்கின்றன உள்வீட்டு தகவல்கள்.

போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் எவருக்கும் அஞ்சாது எவர் பேச்சும் கேளாது அதிரடியாக செயற்படுவதால் இந்த கைது இடம்பெற்ற பின்னர்
ஜனாதிபதியின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தூர இடங்களுக்கான ஜனாதிபதியின் பயணங்கள் பிற்போடப்பட்டுள்ளன. இன்றைய யாழ்ப்பாண அவரது விஜயமும் பிற்போடப்பட்டுள்ளது.

எப்படியோ மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் நாடு கடத்தப்படுவார்களா அல்லது அங்கு தண்டிக்கப்படுவார்களா அல்லது குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்படுவார்களா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்…

எல்லாவற்றுக்கும் அப்பால் இந்த விடயத்தில் பெயர் போட்டுக்கொள்ளவும் சில பாதுகாப்பு உயரதிகாரிகள் முயல்வதாக இன்னுமொரு தகவல் சொல்கிறது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் – எஸ். சிவராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *