தீ விபத்தில் குழந்தை உட்பட 10 பேர் பலி ! 30 பேருக்கு எரிகாயம்!!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் தெற்கு பகுதியில் உள்ள ஓர் எட்டு மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒரு குழந்தை உள்பட பத்து பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஆறு தீயணைப்பு வீரர்கள் உள்பட கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் மிக மோசமான நிலையில் உள்ளார்.

இந்த கட்டடத்தின் மேல்பகுதியில் இருந்து வெளியேறிய தீப்பந்தங்களால் அங்கிருந்த ஏறத்தாழ 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீ விபத்து வேண்டுமென்றே யாரோ ஒருவரால் ஏற்பட்டிருக்கலாம் என்று பாரீஸை சேந்த சட்டப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாரீஸில் உள்ள ஏர்லங்கார் வீதியில் உள்ள இந்த 1970 காலகட்டத்தில் கட்டடத்தில் 12 மணிக்கு (ஜிஎம் டி நேரம்) இரண்டு தளங்களை தாண்டி தீ பரவ ஆரம்பித்ததால் அங்கிருந்த குடியிருப்புவாசிகள் வெளியேற நேர்ந்தது

கட்டடத்தின் மேற்பகுதியில் தீ பிழம்பு காட்சிகளும், தீயணைப்பு வீரர்கள் ஏணிப்படிகளில் ஏறுவதும் தெரிந்தன.

போயிஸ் டி பௌலாக்னி பூங்காவிற்கு மிக நெருங்கியுள்ள இந்த சம்பவ இடத்தில் கூரையில் சிக்குண்டோரை மீட்பதற்கு சுமார் 250 தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாங்கள் இந்த இடத்தை சென்றடைந்தபோது, உலக முடிவு கால நிலைமையை நாங்கள் எதிர்கொண்டதுபோல இருந்தது. சன்னல்கள் வழியாக பலர் உதவி செய்ய கூக்குரலிட்டனர் என்று தீயணைப்பு சேவையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

காயமடைந்தோரில் 6 பேர் தீயணைப்பு வீரர்கள் என்று பிரெஞ்ச் ஒளிபரப்பு நிறுவனமான பிஃஎப்எம்டிவி தெரிவித்தது.

இந்த கட்டடம் ஹெச் வடிவத்தில் இருந்ததால் அதன் முற்றம் வழியாக கட்டடத்திற்குள் நுழைய முடியாமல் போய்விட்டது.

எனவே, கட்டடத்தின் முன்புறத்தில் இருந்து ஏணிகள் மூலம்தான் தீயில் சிக்கியிருந்தோரை மீட்க முடிந்தது.

தீயணைப்பு வீரர்களின் தொழில்முறை திறமையை இந்த சம்பவத்தில் பாராட்டியாக வேண்டும் என்று பாரீஸ் துணை மேயர் இம்மானுவெல் கிரகோரி, ராய்ட்டர்ஸ் நியூஸ் முகமையிடம் தெரிவித்துள்ளார்.

ஐந்து மணிநேர போராட்டத்திற்கு பின்னர் இந்த தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் உயரலாம் என்று தீயணைப்பு சேவையின் செய்தி தொடர்பாளர் ஏஃஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

 

இந்த தீயை அணைப்பதற்கு அவர்களின் வாகனங்களை பயன்படுத்த முடியவில்லை என்பதால், இது மிகவும் சிக்கலான கடமையாக இருந்தது என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புற கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விசாரணை தொடக்கம்

தீயால் உயிரிழப்பு ஏற்படுத்தியதாக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள பாரீஸ் மேயர் ஆன்னி ஹிடால்கோ, உள்துறை அமைச்சர் கிறிஸ்டோபி காஸ்டானரோடு சம்பவ இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.

இந்த நகரின் மத்தியில் உள்ள பேக்கரியில் சில வாரங்களுக்கு முன்னால் ஏற்பட்ட பெரியதொரு வெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *