‘ஸ்ரீலங்காவின் சுதந்திர நாள் தமிழர் தேசத்துக்கு கரிநாள்!’ – வடக்கு, கிழக்கில் மாபெரும் போராட்டங்கள்

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்றன. ஆனால், தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் சுதந்திர தினம் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய சுதந்திர தினத்தை கரி நாளாகப் பிரகடனப்படுத்திய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கரிநாள் பதாகைகளைப் பல்கலைக்கழகத்தில் கட்டியிருந்தன.

அத்துடன், பல்கலைக்கழகத்தைச் சூழ கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டன. பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட இருந்த தேசியக்கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி கொடி ஏற்றப்பட்டிருந்தது.

நாட்டின் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் யாழ். பஸ் நிலையம் முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

‘போலி சுதந்திர தினம் எமக்கு வேண்டாம்’ என்ற தொனிப் பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுளைத் தேடித் தருமாறும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேவேளை, கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள் இணைந்து அரசுக்கு எதிராக மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் இன்று பகல் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞான சிறிதரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளின் கண்ணீருக்கு முடிவு என்ன?’ என்ற வாசகத்துடன் வலிந்து காணப்பட்டவர்களின் உறவினர்கள் கிழக்கிலும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை இன்று மேற்கொண்டனர்.

குறித்த போராட்டம் கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக முன்றலில், இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தை கறுப்புத் தினமாகப் பிரகடனப்படுத்தி முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கிழக்கு மண்ணிலிருந்து உறவுகளைத் தொலைத்த பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் ஒன்றுகூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தலையில் கறுப்புத் துணி கட்டி தமது கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கிய வண்ணம் போராட்டத்தை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *