பொதுத் தேர்தலில் கூட்டணி அமைக்க தமிழகத்தில் முக்கிய கட்சிகள் தீவிரம்!

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்நாட்டில் முக்கிய கட்சிகள் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன.

நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 534 தொகுதிகளுக்கும் 9 அல்லது 10 கட்டங்களாக வாக்குப் பதிவை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தயாராகி வருகின்றது.

இந்தநிலையில் தமிழ்நாட்டில் முக்கிய கட்சிகள் அனைத்தும் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன.

தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை உள்ளன.

இந்த கட்சிகளுக்கு இடையே விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது.

இன்னும் சில தினங்களுக்குள் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது தெரிந்துவிடும்.

ஆளும் அ.தி.மு.க.வும் வலுவான ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டு விடும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தக் கூட்டணி உறுதியானால் அடுத்தகட்டமாக அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெரிந்து விடும்.

இதற்கிடையே டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் சில கட்சிகளுடன் சேர்ந்து பலமுள்ள கூட்டணியை உருவாக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

பா.ம.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் தினகரன் பேசி வருகின்றார்.

இந்தநிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவை சேர்க்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர் எதிர்க்கிறார்கள்.

எனவே, பா.ஜனதா தனது தலைமையில் ஓர் அணியை உருவாக்க முயற்சி செய்யும் என்று தெரிகின்றது.

இந்தக் கூட்டணி உடன்பாடுகள் அனைத்தும் இன்னும் 2 வாரங்களுக்குள் தெளிவாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *