புதிய கூட்டணியில் மொட்டுக்கே முன்னுரிமை! சரணடையுமா சு.க.?

புதிய அரசியல் கூட்டணியில் பதவிகளை நிர்ணயிப்பது தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் விரைவில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து ‘மெகா’ கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணிக்கு கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

கூட்டணிக்குரிய யாப்பை தயாரிப்பதற்காக பேராசிரியர் ஜீ.எஸ். பீரிஸ் தலைமையில் உயர்மட்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்தவாரமளவில் உத்தேச யாப்பு மஹிந்தவிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த கூட்டணியில் தலைவர் பதவி மஹிந்தவுக்கும், தவிசாளர் பதவி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வழங்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இருவருக்கும் இணைத் தலைமை பதவி வழங்கினால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற யோசனையும் முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுச்செயலாளர் பதவியானது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவருக்கே வழங்கப்பட வேண்டும் என்றும்,

மத்திய செயற்குழுவில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தாமரை மொட்டில் அங்கத்துவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பங்காளிக்கட்சிகளாக உள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, தேசிய காங்கிரஸ் உட்பட பங்காளி கட்சித் தலைவர்கள் நிறைவேற்றுக்குழுவுக்கு நேரடியாக தெரிவாவார்கள்.

அதேவேளை, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருப்பதால் இணைத் தலைமைப் பதவி உருவாக்கப்பட வேண்டும் என்பதே சுதந்திரக்கட்சி உறுப்பினர்களின் யோசனையாக இருக்கின்றது.  சுதந்திரக்கட்சி தலைமையிலேயே கூட்டணி அமைய வேண்டும் என துமிந்த தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே குறித்த யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவை எடுப்பதற்காக மஹிந்தவும், மைத்திரியும் விரைவில் சந்தித்து பேச்சு நடத்துவார்கள் என  ‘புதுச்சுடர்’ இணையத்தளத்துக்கு தெரியவந்தது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *