5ஆம் திகதி உரிய தீர்வு இல்லையேல் போராட்டம் வெடிக்கும்! – ரணிலைச் சந்தித்த பின் மனோ தெரிவிப்பு 

“எதிர்வரும் 5ஆம் திகதி பெருந்தோட்டக் கம்பனிகளுடன் நாமும் பேசுவோம். அதுவும் அலரிமாளிகையில் வைத்தே பேசுவோம். பெருந்தோட்டத்துறை அமைச்சர், தொழில் அமைச்சர் ஆகியோரும் இதில் பங்கேற்பார்கள். தீர்வை எட்ட முயற்சிப்போம். உரிய தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

”கொழும்பிலே சுமைதூக்கும் தொழிலாளர்கள்கூட நாளொன்றுக்கு 2 ஆயிரம் ரூபா உழைக்கின்றனர். ஆனால், பல தசாப்தங்களாக நாட்டின் பொருளாதாரத்தையே தோளில் சுமக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னும் நியாயமான சம்பளம் வழங்கப்படவில்லை.

200 ரூபாவை வழங்கிவிட்டு வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு சொல்வது அசிங்கம், அராஜகம், அயோக்கியத்தனம். எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள உயர்வை ஏற்கமுடியாது.

ஒன்று பெருந்தோட்டக் கம்பனிகள் இறங்கி வரவேண்டும். இல்லையேல் நாம் அரசைவிட்டு வெளியேறவேண்டும். இரண்டில் ஒன்று நிச்சம் நடைபெறும்.

எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். எனவே, அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

2015இல் நல்லாட்சியை நாமே உருவாக்கினோம். நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்தோம்.

கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின்போது நாமே (தமிழ் முற்போக்குக் கூட்டணி) அரசையும், பிரதமரையும் பாதுகாத்தோம். நாம் ஓர் அடி பின்வைத்திருந்தால் எல்லாமே தலைகீழாக மாறியிருக்கும்.

எனவே, எமது பலத்தை பலவீனமாகக் கருதவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

கூட்டுக்களவாணிகளின் செயற்பாட்டை – ஒப்பந்தத்தை எம்மால் ஏற்கமுடியாது. வர்த்தமானி அறிவித்தலை தடுத்து நிறுத்தியுள்ளோம்.

எதிர்வரும் 5ஆம் திகதி பெருந்தோட்டக் கம்பனிகளுடன் நாமும் பேசுவோம். அதுவும் அலரிமாளிகையில் வைத்தே பேசுவோம். பெருந்தோட்டத்துறை அமைச்சர், தொழில் அமைச்சர் ஆகியோரும் இதில் பங்கேற்பார்கள். தீர்வை எட்ட முயற்சிப்போம்.

எதிர்வரும் 5ஆம் திகதி உரிய தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *