மன்னார் மனிதப் புதைகுழி விடயத்தில் தமிழருக்குக் காத்திருக்கிறது அதிர்ச்சி! – சுமந்திரன் எம்.பி. பரபரப்புத் தகவல்

“நூற்றுக்கணக்கில் மனித எலும்புக் கூடுகள், எச்சங்கள் மீட்கப்பட்ட மன்னார் புதைகுழி விடயத்தில், காபன் பரிசோதனை மூலம் அந்த எச்சங்களின் காலத்தை நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் அமெரிக்காவின் புளோரிடாவில் நடக்கின்றன. அதன்மூலம், அக்கொடூரங்கள்எ நடந்தேறிய காலம் உறுதிப்படுத்தப்படுகின்றபோது அது தமிழர் தரப்புகளுக்கும் அதிர்ச்சிகளைக் கொடுக்கும்.”

– இவ்வாறு பரபரப்புத் தகவல் வெளியிட்டிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்.

வெளிநாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு பரபரப்பான விடயத்தை வெளியிட்டார்.

மன்னார் புதைகுழி விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக சிரத்தை காட்டவில்லையே என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கையில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“மன்னார் புதைகுழி விடயத்தில் நாம் மெளனம் காக்கவில்லை. பல இடங்களில் அது குறித்துப் பேசியிருக்கின்றோம். நாடாளுமன்றத்திலும் பல முறை உரையாற்றியிருக்கின்றோம்.

இவ்விடயம் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நாம் கேட்டிருக்கின்றோம்.

இதில், பிரதானமானது அந்தப் புதைகுழிச் சம்பவங்கள் எந்தக் காலப் பகுதியில் இடம்பெற்றவை என்பதைத் திகதியிடுவதாகும். அதை நாம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.

இப்போது அந்த எலும்புகள், எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளொரிடாவுக்கு அனுப்பப்பட்டு, ஓரிரு தினங்களுக்கு முன்னர் அது அங்கு போய்ச் சேர்ந்திருக்கின்றன.

காபன் பரிசோதனை மூலம் அவை எந்தக் காலத்துக்கு உரியவை என்பதை நாம் உறுதிப்படுத்திக் கூடியதாக இருக்கும்.

அதன் மூலம், அது எந்தக் காலப் பகுதிக்குரியது என்ற முடிவுகள் வெளியிடுகின்றபோது அது, தமிழ்த் தரப்புகளுக்கும் சில அதிர்ச்சிகளைக் கொடுக்கும் என்றுதான் நான் நினைக்கின்றேன்.

ஆகையினால் நாங்கள் இவ்விடயத்தை வலியுறுத்தாமல் இல்லை. யார்தான் அதற்குக் காரணமாக இருந்தாலும் அவர்கள் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருப்பார்கள்.

இலங்கை அரசின் இராணுவமாக இருந்தாலும் நிச்சயமாகப் பொறுப்புக்கூற வேண்டியிருக்கும். அல்லது தமிழ்த் தரப்பிலே ஏதேனும் ஓர் ஆயுதக் குழு இதற்குக் காரணமாக இருந்தாலும் அவர்களும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய தேவைப்பாடு இருக்கும்.

இந்திய அமைதி காக்கும் படை அந்த இடத்திலே இருந்திருக்கவில்லை என்று கூறப்படுகின்றது. அது குறித்தும் நாங்கள் அவதானிக்க வேண்டும்.

எந்தக் காலத்தில் இது நடந்தது என்பது உறுதியாகும்போது சில உண்மைகள் வெளியாகும். அதுவரைக்கும் அது குறித்து அதற்கு மேல் நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை.

ஆனால், காலம் அறியப்படும்போது பல அதிர்ச்சிகள் எமக்கும் காத்திருக்கின்றன என்பது மட்டும் எனக்குத் தெரியும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *