இ.தொ.காவுக்கு அருகதை இல்லை – வேலுகுமார் சாட்டையடி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு  வெறும்  20 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுத்துவிட்டு, ஏதோ உலகசாதனை நிகழ்த்திவிட்டது போல் வீராப்பு பேசும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என மார்தட்டிக் கொள்வது வங்குரோத்து  அரசியலின் உச்சகட்டமாகும் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான வேலுகுமார் தெரிவித்தார்.

சலுகைகளுக்கும், எலும்புத் துண்டுகளுக்கும் விலை போகாமல்,  மக்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்தி கொள்கை அரசியலை  முன்னெடுத்துவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியை விமர்சிப்பதற்கு  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என்றும் அவர்  கூறினார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
‘’  மலையக மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதே எமது இலக்காகும்.  இதன் படி மலையக அபிவிருத்தி அதிகாரசபையை  நிறுவியுள்ளோம்.
தோட்டப்புறங்களின்  அபிவிருத்திக்கு தடையாக இருந்த பிரதேச சபை சட்டத்தை மாற்றியமைத்துள்ளோம்.
இருந்தாலும், அதை செய்துவிட்டோம், இதை செய்யப்போகின்றோம் என ஒருபோதும் நாம் மார்தட்டியதில்லை.
எனினும், சரணாகதி அரசியலை நடத்துபவர்கள், புதுமணத் தம்பதிக்கு அருந்ததி காட்டப்படுவது போல், ‘தாத்தா’ அதை செய்தார், இதைசெய்தார் என ‘அந்தகாலத்து’ கதையைக் கூறியே அரசியல் நடத்திவருகின்றனர்.
உருப்படியாக எதையும் செய்ததாக தெரியவில்லை.  கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாவதன் வான மேறி வைகுண்டம் போன கதைபோல் தான் சேவல் கட்சிக்காரர்களின் செயற்பாடுகள் இருக்கின்றன..
மலையக மக்களுக்கென தனித்துவமானதொரு கூட்டணியை அமைத்து , இதுவரை காலம் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களிலும், தொகுதிகளிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுத்துள்ளோம்.  உரிமை அரசியலுக்காக போராடிவருகின்றோம்.
ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணக்கப்பாட்டு ரீதியில் அரசியல் நடத்திவரும் நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரணாகதி அரசியலை நடத்தவில்லை என்பதை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் புரிந்துகொள்ளவேண்டும். சூழ்ச்சி மூலமாவது பதவியை பெறவேண்டும் என கீழ்மட்ட அரசியல் சிந்தனையும் எம்மிடம் இல்லை.
மக்களுக்காகவே அரசியல் நடத்துகின்றோம். எனவே, எமது  மக்களுக்கு அநீதி – துரோகம் இழைக்கப்படுமானால் எந்த கொம்பனாக இருந்தாலும் எதிர்த்து குரல் கொழுப்புவோம். பதவி, பட்டம் எமக்கு முக்கியமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமானது, நாம் உருவாக்கிய அரசாங்கமாகும். எனவே, உரிமைகளை  தட்டிக்கேட்பதற்குரிய உரிமை எமக்கு இருக்கின்றது.
அதன்அடிப்படையில்தான்  பிரதமரை முதலாம் திகதி சந்திக்கவுள்ளோம்.  சாதகமான பதில் கிடைக்காவிட்டால்,  கடுமையான அரசியல் தீர்மானங்களை எடுக்க நேரிடும்.’’ என்றார் வேலுகுமார் எம்.பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *