தேர்தலுக்குத் தயாராகுமாறு கோட்டாவுக்கு கூறவில்லை! – அவர் பொய் சொல்கிறார் என்கிறார் மஹிந்த

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில், அப்படியான எந்த அறிவித்தலையும் தான் வெளியிடவில்லை என்று மஹிந்த ராஜபக்ச மறுத்துள்ளார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தயாராகிவிட்டார் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்திருந்த நிலையில், அந்தச் செய்தியும் பொய்யானது எனவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் பொய்யுரைத்து வருகின்றார்கள் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியோ தனித்து நின்று முடிவெடுக்க முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் ஒரே கூட்டணியைச் சேர்ந்தவை.

அதேவேளை, இந்தக் கூட்டணியின் பங்காளிக் கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இல்லாவிடினும் அதில் உள்ளவர்கள் வேறு ஆள்கள் அல்லர்.

இந்தக் கூட்டணியைச் சேர்ந்தவர்களே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உள்ளார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய மூன்று கட்சிகளையும் ஒருங்கிணைத்துத்தான் ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிப்போம்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நாம் பேச்சு நடத்துவோம்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அவசரப்பட்டு முடிவு எதையும் எடுக்கமாட்டோம்.

வெற்றியை இலக்காகக்கொண்டு ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுசெய்யப்படுவார்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *