தமிழ் முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து வெளியேறாது!

இலங்கை அரசியலில் இப்போது மலையக பிரச்சினைதான் ட்ரென்டிங்கில் உள்ளது.

மலையத்துக்குள் வட்டமிட்டுக்கொண்டிருந்த இந்த கூட்டு ஒப்பந்த பிரச்சினைக்கு அலரிமாளிகையில் பிரதமரின் தலைமையில் தற்காலிகமாக சமாதி கட்டப்பட்டதோ அப்போதுதான் அது கொழும்பு அரசியல் பிரச்சினையாக பரிணமித்தது.

அதுவரை தொழிலாளர்களின் போராட்டத்தை இந்த அரச தலைமைகள் கண்டுகொள்ளவில்லை.

எது எப்படியோ பிரதமரின் கைகளுக்கு சம்பளப் பிரச்சினை சென்றது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

ஏனெனில், எதிரணியில் நிற்கும் தொண்டமான், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அலரிமாளிகையில் வைத்தே ஒப்பந்தத்தை முடித்துவிட்டார்.

இது அமைச்சர்களான மனோ கணேசனுக்கும், பழனி திகாம்பரத்துக்கும் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியில்தான், அரசாங்கத்திலிருந்து விலகுவதாகவும், நாளைய தினம் பிரதமருடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் நல்ல முடிவை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் சொல்கிறது கூட்டணி.

இலங்கை அரசியல் வரலாற்றை சற்று புரட்டிப்பார்த்தால், ஒற்றுமையாக இருந்த கூட்டங்களையே சிதைத்து சின்னாபின்னமாக்கிய பெருமை தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே உரித்ததானதாகும் என்பதை நான் சொல்லி யாரும் அறியவேண்டியதில்லை.

சர்வதேச ரீதியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனது பைக்குள் வைத்துக்கொண்டிருக்கிறார்.

அப்படியிருக்கையில் அரசியல் களத்தில் கீரியும் பாம்புமாய் இருக்கும் தொண்டா மற்றும் மனோ – திகா கூட்டணியை சமாளிப்பதெல்லாம் அவருக்கு சர்வசாதாரணமாய் இருக்கும்.

அலரிமாளிகையில் தொண்டமானை வைத்து கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால், அதற்கு தனது பங்காளிகளான மனோவும், திகாவும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதை சற்றும் சிந்திக்காமல் இப்படியொரு முடிவுக்கு வந்திருப்பாரா ரணில்?

இன்று மலையக அரசியலாக இருக்கட்டும், வட,கிழக்கு அரசியலாக இருக்கட்டும் எல்லாமே ரணில் என்ற ஒற்றை மனிதரை சுற்றிக்கொண்டே இருக்கவேண்டிய நிர்ப்பந்த அரசியலே உருவாக்கப்பட்டுள்ளது – நடந்துகொண்டிருக்கின்றது.

ஒக்டோபர் 26 அரசியல் மாற்றமானது அரச தலைவர் மீதிருந்த சிறிய நம்பிக்கையும் அடிமட்ட மக்கள் மத்தியிலிருந்து அகற்றிவிட்டது.
இதற்கு அப்பால், மஹிந்த கோட்டா என்ற தலைமைகளின் நிலைமையும் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில், கூட்டு ஒப்பந்தத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசிலிருந்து வெளியேறுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியால் தற்போது முடிவெடுக்க முடியாது.

ஏனெனில், அடுத்துவரவிருக்கும் தேர்தல்களை மையமாகக்கொண்ட அரசியல்களம் ரணில் என்ற ஒற்றை மனிதரைச் சுற்றியே சிறுபான்மைக் கட்சிகள் நிற்கவேண்டிய நிர்ப்பந்தத்தை தோற்றவித்துள்ளது.

இந்த நிலையில், கூட்டு ஒப்பந்த விடயத்தை மாத்திரம் காரணமாக வைத்து முற்போக்கு கூட்டணி அரசிலிருந்;து விலகினால், அது கூட்டணியின் எதிர்கால நடவடிக்கையிலும், தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏனெனில்பின்னொரு காலத்தில் மைத்ரி மற்றும் மஹிந்த ஆகியோருடன் மனோவும், திகாவும் இணைந்தாலும், தற்போதைக்கு அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

மேலே சொல்லப்பட்ட விடயமே இதற்கு காரணமாகும்.

நாளைய பேச்சுவார்த்தையில், தொழிலாளர்களின் வரவுக்கான கொடுப்பனவையும், மேலதிக கொளுந்துக்கான கொடுப்பனவையும் சேர்த்து 140 ரூபா கிடைக்கவேண்டும் என்று பிரதமரிடம் கோரவுள்ளதாக சொல்கிறது கூட்டணி.

ஆனால், இந்தத் தொகை இல்லாவிட்டாலும், பிரதமரால் கொடுக்கப்படும் இதைவிட குறைந்த தொகைக்கு அல்லது ஏதாவது ஒரு சலுகைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி இணங்கித்தான் ஆகவேண்டும்.

இல்லாவிட்டால், அதைவிட குறைந்த தொகையை கொடுத்து, தொண்டமானை தனது பங்காளியாக்கி அமைச்சுப் பதவியை கொடுப்பதாக மனோ – திகாவுக்கு பிரதமர் வாய்பூட்டு போடமாட்டார் என்பதற்கும் வாய்ப்பில்லாமலில்லை.

மறுபுறத்தில் பிரதமருடன் இணையும் ஆர்வத்தில் தொண்டமான் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எனவே, பிரதமர் தங்களுடன் இணங்கவில்லை என்று மனோவும், திகாவும் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால், அந்த இடத்தைப் பிடிக்கும் தொண்டமான், பிரதமரிடமிருந்து ஏதாவது ஒரு சிறு தொகையையாவது நிவாரணமாக பெற்றுக்கொடுத்து, கூட்டு ஒப்பந்தத்திற்கு அப்பால், இதையும் வாங்கிக்கொடுத்துவிட்டேன் என்றும்,

அமைச்சர்களாக இருந்து மனோ – திகாவினால் செய்யமுடியாததை தான் செய்து விட்டதாகவும் சொல்லி, மலையகத்தில் சரிந்துவரும் தமது சாம்ராஜ்யத்தை ஓரளவாவது மீள தூக்கிநிறுத்த வாய்ப்பாக அமைந்துவிடும்.

தொண்டா – மனோ திகா கூட்டணி பிரச்சினையில் ரணிலுக்கு பாதிப்பில்லை. அப்படியொரு பாதிப்பு இருக்குமென்று தெரிந்திருந்தால், கூட்டு ஒப்பந்த விடயத்தில் பிரதமர் இப்படியொரு தைரியமான நடவடிக்கையை எடுத்திருக்கமாட்டார்.

எங்களால்தான் அரசாங்கம் இருக்கிறது என்ற உண்மையை சொல்லிக்கொண்டிருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே தொண்டாவை தனது கோட்டைக்குள் அழைத்திருப்பார் ரணில்.

இந்த நிலையில், தங்களின் பேரம்பேசும் சக்தியை பயன்படுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி ஏதாவது ஒரு தொகையை இடைக்கால கொடுப்பனவாக பெற்றுக்கொடுத்து, அரசாங்கத்தில் தனது பயணத்தை தொடருவதற்கான வாய்ப்பே அதிகளவில் உள்ளது.

கூட்டு ஒப்பந்தத்திற்கு அப்பால், இதை நாம் பெற்றுக்கொடுத்தோம் என்று தமது பிரசாரத்தை மலையத்தில் முன்னெடுக்க கூட்;டணிக்கு இது ஒரு வாய்ப்பாய் அமையும்.

அதையும் மீறி கூட்டணி அடம்பிடித்தால், தொண்டமானையும் தனது ஆட்சியில் பங்காளியாக்குவதாக ரணில் கூறினால், அது கூட்டணியின் எதிர்கால அரசியலில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும்.

இங்கே நடப்பது நடந்துகொண்டிருப்பது எல்லாமே அரசியல் தந்திரமல்ல: தந்திர அரசியல்

எனவே, இந்த விடயத்தில் தொழிலாளர்களின் நலனைவிட, இந்த இடைவெளி தொண்டமானுக்கு சாதகத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற தனது அரசியல் நலன்குறித்தே கூட்டணி அதிகளவில் சிந்தித்து முடிவெடுக்கும்.

அப்படிப்பார்த்தால்;, ஏதாவது ஒன்றை பெற்றுக்கொடுத்து, எங்களால் முடிந்த நாங்கள் செய்துவிட்டோம் என்று அரசாங்கத்தில் தொடரலாம் கூட்டணி. அத்துடன், தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்திலும் ஏதாவது நிவாரணத்தைப் பெற்றுத்தரலாம் என்றும் கூறலாம்.

மறுபுறத்தில் தனக்கு ஆதரவளித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு எதிர்காலத்திலும் தேவைப்படும் என்பதனால், நாளைய தினம் பிரதமரும் ஏதாவது இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி சமரசம் செய்வார்.

அதனையும் மீறி பிரதமருடன் இணக்கப்பாடின்றி, அரசாங்கத்திலிருந்து வெளியேறும் தைரியம் கூட்டணிக்கு வருமானால், அது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றுதான்.

எதுஎப்படியோ, நாளைய பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் ஏதாவது ஒரு முடிவு வரப்போவதை எண்ணி மகிழ்ச்சியடையலாம்.

கூட்டு ஒப்பந்தத்தில் துரோகமிழைத்தாலும், இப்படியானதொரு நிலைமைக்கு வழிவகுத்த இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும், இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷுக்கும் நன்றிசொல்வதில்லை தவறில்லைபோல.

ஊடகவியலாளர் – கே. பாரதிராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *