கூட்டுக் களவாணிகளுக்கு அங்கீகாரமளித்தார் ரணில்! அரசில் நீடிப்பதா? விலகுவதா? – முடிவு நாளை என்கிறார் மனோ

“கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது கூட்டுக் களவாணியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கைலாகு கொடுத்து அங்கீகாரமளித்தமை வருத்தத்துக்குரியது. நாளை முதலாம் திகதி அவருடன் நடத்தவுள்ள பேச்சின் பின்னர் இந்த அரசில் நீடிப்பதா அல்லது விலகுவதா என்பது குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்க்கமான முடிவெடுக்கும்.”

– இவ்வாறு தெரிவித்தார் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட அமைச்சர் மனோ கணேசன் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியலயம் ஆகியன இணைந்து நடத்திய மெய்வன்மைப் போட்டியில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார்.

இதன் பின்னர் ‘காலைக்கதிர்’ பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு
கூறினார்.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தான விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இ.தொ.கவுடன் இணங்கிச் செயற்பட்டார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கேட்டபோதே அவர் இப்படிக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கம், தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி என மூன்று அமைப்புக்கள் உள்ளன.

இந்த மூன்று அமைப்புகளும்தான் தோட்ட நிறுவனங்களுடன் கலந்து பேசி கூட்டு ஒப்பந்தத்தைக் கையெழுத்திடுகின்றார்கள்.

நாங்கள் அதில் இல்லை. நாங்கள் எப்போதும் கூட்டு ஒப்பந்த முறைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்திருக்கின்றோம்.

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியே வந்தால்தான் தோட்டத் தொழிலாளர்களுக்கு விடிவு கிட்டும். ஐக்கிய தேசியக் கட்சி அரசில் பிரதான கட்சியாக இருக்கின்றது. இந்த அரசு ஐ.தே.கவுக்குச் சொந்தமான அரசல்ல.

இந்த அரசில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய போன்ற பல கட்சிகள் உள்ளன.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் இப்போது வெறும் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய காட்டிக் கொடுப்பு. கூட்டுக் களவாணிகள் செய்த வேலை.

இந்தக் கூட்டுக் களவாணிகளுடன் நாங்கள் உடன்பட முடியாது. எமது நிலைப்பாட்டை நாளை முதலாம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்துப் பேசும்போது தெளிவாகத் தெரிவிப்போம்.

ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியின்போது தமிழ் முற்போக்குக் கூட்டணியான நாம் இந்த அரசுக்குப் பெரும் பங்களிப்பை வழங்கி அவர்களைக் காப்பாற்றியிருக்கின்றோம்.

ஆனால், இ.தொ.கா. என்ற கூட்டுக் களவாணிக் கட்சியுடன் சேர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கைலாகு கொடுத்து அவர்களை அங்கீகரித்தமை எமக்கு மிகவும் மன வருத்தத்தைத் தருகின்றது.

நாளை நடைபெறவுள்ள பேச்சின் பின்னர் நாங்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்போம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *