பிரதமருடனான சந்திப்பில் சிறந்த முடிவு கிடைக்கும் – திகா நம்பிக்கை!

” கட்சித் தலைவன் என்பவன் கடவுள் அல்ல. நான் துரோகமிழைத்தால்கூட தைரியமாக சுட்டிக்காட்டுங்கள். நிச்சயம் நான் அச்சப்படுவேன்.மாறாக தலைவன் எதைசெய்தாலும், அது சரியென வாய்மூடி மௌனம் காத்தால், செய்வபன் எல்லாவற்றையும் செய்துகொண்டுதான் இருப்பான். இந்நிலைமை மாறவேண்டும்.” – என்று அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நோர்வூட்  விளையாட்டு   அரங்கில் இன்று (31) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

40 சதவீத சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துவிட்டதாககூறி கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மக்களை முட்டாள்களாக்குவதற்கு முயற்சிக்கின்றன.

வெறும் 20 ரூபாவை வாங்கிக்கொடுத்துவிட்டு, இரண்டு கொள்ளைக்காரர்களும் எம்மை ஏமாற்றிவிட்டனர்.

கடந்த காலத்தில்  140 ரூபா எவருக்கும் கிடைக்கவில்லை என்று வயிலுள்ள பதுளைக்கார அமைச்சர் சொல்கின்றார்.

தோட்ட தொழிலாளர்கள் நீங்கள் எல்லோரும் கடந்த காலங்களில் வேலைக்கு போகவில்லையா, சோம்பேறியாக இருந்தீர்களா? சோம்பேறிகளுக்கு கிடைத்திருக்காது. ஆனால் இந்த தொகை தொழில் செய்தவர்களுக்கு கிடைத்துள்ளது.

தொழில் செய்யாமல் 20 வீதமானவர்கள் இருந்தாலும், மிகுதி 80 வீதமானவர்கள் தொழில் செய்பவர்கள் இது அணைவருக்கும் தெரியும்.

எப்படி எல்லாம் “பிளேட்டை” மாற்றுகின்றார்கள். காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு என நாக்கு நாலாபுறமும் சுழல்கின்றது. நான் தான் பச்சை தமிழன் என்று சொல்லிக்கொண்டு தோட்ட தொழிலாளியையும் பிரதமர் உள்ளிட்ட அனைவரையும் அவர் இன்று கஷ்டத்தில் தள்ளியுள்ளார்.

என்ன காரணம் என்றால், இவர்கள் நினைக்கின்றார்கள் நாம் எதை செய்தாலும் மக்கள் எம்மோடு தான் இருப்பார்கள் என்பது தான், நான் தவறு செய்தாலும் என்னை தட்டிக் கேட்க வேண்டும். ஒரு கட்சி தலைவர் என்றால் அத் தலைவர் தான் கடவுள் என்று நினைக்கின்றீர்கள்.

நாம் அந்த காலத்திலிருந்து 200 வரூடமாக இந்த தவறை செய்கின்றோம். இனிமேலும் செய்யாதீர்கள். நான் நாளை உங்களுக்கு துரோகம் செய்தாலும் என்னை தட்டி கேளுங்கள். நான் பயப்பிடுவேன். நான் எதை செய்தாலும் சரி என்று எண்ணி இருந்தால் செய்பவர்கள் செய்து கொண்டே போவார்கள்.

மாற்று தொழிற்சங்கங்கள் எம்மை ஏமாற்றிவிட்டன. எப்படி இருந்தாலும் வேறு கட்சிகளில் இருந்தாலும் நாம் ஒரு சமூகம் ஒரே தோட்ட தொழிலாளி இந்த சம்பளத்திற்கு எதிராக போராட வேண்டும்.

அமைச்சு பதவி வைத்திருந்தால் சிலர் மௌனித்து பயப்பிடுவார்கள். ஆனால் நான் அவ்வாறு அல்ல.  காட்டிக்கொடுத்த இவர்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இன்றும் கொட்டகலையில் தலைவர்மார்களுக்கு தோட்டங்களில் போராட்டங்கள் செய்யாமல் தடுத்துவிடுங்கள் என்று சொல்லப்படுகின்றது. எவர் வந்தாலும் சரி அடியுங்கள்.

யாருக்கும் பயப்பட வேண்டாம். இப்படி செய்த தொழிற்சங்க தலைவர்களை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

அது அந்த காலம் தமிழ் முற்போக்கு கூட்டணி 30.01.2019 அன்று கூடி அதன் தலைவருடன் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளது.

அமைச்சு அதிகாரம் தேவையில்லை. வாக்களித்த மக்களை காப்பாற்ற வேண்டும் என்று. ஆகையால் தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 பேரும் பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம்.

குறித்த சந்திப்பில் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புகின்றேன். குறைந்தபட்சம் ஊக்குவிப்பு கொடுப்பனவாக 140 ரூபா வழங்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தை சாதகம் இல்லை என்றால் இந்த 6 பேரும் அட்டனில் வந்து அமருவோம். போராட்டம் ஒரு நாளில் மாத்திரம் அல்லாது தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம். உலகமே இதை அவதானிக்க வேண்டும்.

முழு பூசணிக்காயை சோற்றில் அமுக்கியது போல செய்த இவர்களை தட்டிக் கேட்போம். இப்போராட்டத்திற்கு மக்கள் அணைவரும் ஒன்றிணைந்து வரவேண்டும். மக்களை விற்று நான் காசு வாங்கவில்லை. பொய் சொல்லவில்லை. ஏமாற்ற எனக்கு தெரியாது.

மக்கள் சக்தியே நிரந்தரம் என்பது எனக்கு தெரியும். ஆகையால் நியாயமான சம்பளத்தை பெறும் வரை துணிச்சலாக நின்று ஏமாற்றுபவர்களக்கு எதிராக போராடுவோம்.” என்றார்.

க. கிசாந்தன், கிருஸ்ணா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *