மகளை சீரழித்த தந்தைக்கு 15 வருடங்கள் கடூழியச் சிறை!

தனது மகளை வன்புணர்வுக்குட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இஸர்தீன் தீர்ப்பளித்தார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை என்ற இடத்தில் 2008ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் திகதி சம்பவம் இடம்பெற்றது.

அந்த இடத்தைச் சேர்ந்த சீனித்தம்பி வசந்தராசா என்ற குடும்பத் தலைவர், தனது மனைவி வீட்டில் இல்லாதவேளை 16 வயதுக்குட்பட்ட தனது மகளை வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமி தாயாரிடம் முறையிட்டுள்ளார். அதனால் சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு வழங்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று வழக்கு கோவைகள் சட்ட மா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டன.

16 வயதுக்குட்ட சிறுமியைப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் குடும்பத்தலைவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் நெறிப்படுத்தினார். விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இஸர்தீன் நேற்று வழங்கினார்.

“மகளை வன்புணர்ந்த தந்தையார் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. அத்துடன், 5 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தைக் குற்றவாளி செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்” – என்று மேல்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *