ஆறுமுகனின் அலரிமாளிகை ‘தந்திரம்’!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாகக் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், அலரி மாளிகையில் வைத்துக் கைச்சாத்திடப்பட்டமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் சாணக்கியமென, அக்கட்சியின் தகவல் மூலமொன்று தெரிவித்தது.

எனவே, இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டதன் மூலம், இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், த.மு.கூவுக்கு ‘செக்’ வைத்துள்ளாரெனவும், அத்தகவல் தெரிவித்தது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிவரும் த.மு.கூ, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பிலும், ஐ.தே.கவுக்கும் அதன் தலைவர் பிரதமர் ரணிலுக்கும், முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது.

அத்தோடு, கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிரான கருத்துகளையே, அக்கட்சியின் அநேகமானோர் வெளிப்படையாக வெளிப்படுத்தி வைத்தனர்.

இந்நிலையில், பிரதமர் முன்னிலையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை, கூட்டணிக்குப் பாதிப்பாக அமையுமென எதிர்பார்ப்பதாக, இ.தொ.கா தரப்புகள் தெரிவித்தன.

இவ்வொப்பந்தம், ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளனத்திலேயே கையெழுத்திடப்படவிருந்த போதிலும், அங்கு ஏற்பட்ட எதிர்ப்புகளைப் பயன்படுத்தியே, அலரி மாளிகையில் அவ்வொப்பந்தத்தைக் கைச்சாத்திடும் முடிவு எடுக்கப்பட்டதெனத் தெரிகிறது.

இதற்கான அனுமதி, பிரதமர் ரணிலால் வழங்கப்பட்டதும், த.மு.கூவை வீழ்த்துவதற்கான சந்தர்ப்பமாக, இ.தொ.கா இதனை பயன்படுத்தியதெனவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில், இ.தொ.காவின் முக்கியஸ்தவர் ஒருவரிடம் வினவியபோது, “கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராகக் குரல்கொடுத்து வரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியினர், இனி, கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் வாய்திறக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டோம்” என மகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.

இதேவேளை, பிரதமரின் இந்த நடவடிக்கையால், பிரதமர் மீது அதிருப்தியில், கூட்டணித் தலைமை இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை உறுதிப்படுத்துவது போல், இறக்குவானை பரிசுத்த யோவான் தமிழ்க் கல்லூரியில் நேற்று (29) இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட த.மு.கூவின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், “கூட்டு ஒப்பந்தக் களவாணிகளுடன், பிரதமர் ரணில் இணைந்துசெயற்பட்டமை மிகப்பெரிய தவறு.

அரசாங்கத்தைப் பாதுகாத்த எங்களுக்குத் தெரியாமல், பிரதமர் ரணில் இவ்வாறு நடந்திருக்க கூடாது. இது தொடர்பில் பிரதமரிடம், நேரடியாகவே எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *