கேப்பாப்பிலவு படை முகாம் வாசலில் தொடர்கின்றது மக்களின் போராட்டம்!

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில், இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, படைமுகாம் வாயிலில் ஆரம்பிக்கப்பட்ட முற்றுகைப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

காணி விடுவிப்பை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கேப்பாப்பிலவு மக்கள், நேற்றுமுன்தினம் சனிக்கிழமை முதல் படைமுகாம் வாயிலில் முற்றுகைப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

எனினும், நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்குப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை படைமுகாம் வாயிலிலிருந்து 75 மீற்றர் தொலைவில் சென்று போராட்டம் நடத்துமாறும், அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு செயற்படுமாறும் முல்லைத்தீவு நீதிமன்றால் உத்தரவிடப்பட்டது.

அதன்படி படைமுகாம் வாயிலிலிருந்து 75 மீற்றர் தொலைவில் சென்று போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த முற்றுகைப் போராட்டம் இன்றும் தொடர்ந்தது. இராணுவ முகாமுக்கு முன்பாக, பெண்களும் குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த பொதுமக்களும், அருட்சகோதரிகளும் பொது அமைப்புக்களும் கலந்துகொண்டுள்ளனர்.

கேப்பாப்பிலவில் உள்ள தங்களது காணிகளை விடுவித்துத் தருமாறு வலியுறுத்தி கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், கேப்பாப்பிலவுப் பிரதேசத்தில் வசித்த 84 குடும்பங்களினால் தொடர்ச்சியாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு, ஒரு மாதகால அவகாசம் வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால் வாக்குறுதி வழங்கப்பட்டது.

எனினும், வழங்கப்பட்ட வாக்குறுதிக்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதையடுத்து, படைமுகாம் வாயிலில் மக்கள் தமது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *