சமஷ்டிப் பண்புகளுடனேயே வருகிறது புதிய அரசமைப்பு! – சந்தேகம் வேண்டாம் என்கிறார் சம்பந்தன்

“புதிய அரசமைப்பு சமஷ்டிப் பண்புகளுடன்தான் வருகின்றது. சொல்லாடல்களை வைத்து இதில் நாம் சந்தேகம் கொள்ளக்கூடாது – முரண்படக்கூடாது.”

– இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கொழும்பு, ஆமர் வீதி – பிரைட்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையிலும், நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்திலும் சமஷ்டிப் பண்புகள் காணப்படுகின்றன. அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு திரும்பப் பெற முடியாத வகையில் மாகாண சபைகளிடம் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஓரிடத்தில் அதிகாரங்கள் குவிந்திருந்தால்தான் அது ஒற்றையாட்சி. அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டால் அது கூட்டாட்சி (சமஷ்டி). எனவே, இதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். சொற்பதங்களை – சொல்லாடல்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நாம் முரண்படக்கூடாது.

வடக்கு, கிழக்கு மக்களிடம் உண்மை நிலைமையை நாம் தெளிவுபடுத்த வேண்டும். மக்களைக் குழப்பும் விதத்தில் எவரும் கருத்துக்களை வெளியிடக்கூடாது.

தெற்கில் உள்ள மக்களை சமாளிப்பதற்காக அரச தரப்பினர் சொல்லாடல்களைத் தங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துவார்கள். இதை நாம் தூக்கிப் பிடிக்கக்கூடாது.

புதிய அரசமைப்பு நிறைவேற அனைத்து வழிகளிலும் நாம் ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *