உடலுறவுக்கு மனைவி மறுப்பு ! நீதிகோரி நீதிமன்றம் சென்ற கணவன்!!

திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவி தாம்பத்திய உறவுக்கு ஒத்துழைக்காததை காரணமாக  கூறி கணவர் விவாகரத்து கோருவது ஏற்றுக்கொள்ள முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த குணா – வனிதா தம்பதியினருக்கு 1997 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 1999ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தனது மனைவி தாம்பத்திய உறவுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்று காரணம் கூறி தனக்கு விவாகரத்து வழங்ககோரி குடும்ப நல நீதிமன்றத்தில் குணா வழக்கு தொடர்ந்தார்.

பதில் மனுதாக்கல் செய்த வனிதா, எனது கணவர் கூறிய காரணம் ஏற்புடையது அல்ல. அவருக்கு அவரது அத்தை மகளுக்கும் தவறான தொடர்பு உள்ளது.

அவர் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கிறார். எனவே, எனக்கும் எனது மகளுக்கும் மாதம் ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த ஈரோடு நீதிமன்றம், தன் மகளின் பராமரிப்புக்காக குணா மாதம் தோறும் ரூ.7,500 ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து குணா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது, மனுதாரருக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டன.

வயதுக்கு வந்த மகள் உள்ளார். இந்நிலையில், தனது மனைவி தாம்பத்திய உறவுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்று கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

திருமணம் ஆகி ஒருசில ஆண்டுகளில் இந்த காரணத்தைக் கூறி விவாகரத்து கேட்கலாம். அதற்காக இதுபோல காரணங்களை கூறி 16 ஆண்டுகளுக்கு பின்னர் வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது.

வயது, உடல்நிலை, குழந்தையை வளர்ப்பதற்கான கூடுதல் பொறுப்பு போன்ற சூழ்நிலைகள் மனைவிக்கு ஏற்பட்டிருக்கும்போது, இதுபோன்ற குறைகளை கூறி விவாகரத்து பெற முடியாது.எனவே மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *