அமெரிக்காவில் 20 ஆண்டு சிறைத்தண்டனையில் சிக்கும் மகிந்தவின் மைத்துனர்!

அமெரிக்க நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள, மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் ஜாலிய விக்ரமசூரிய மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்,  20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார், மகிந்த ராஜபக்சவின் மைத்துனரான ஜாலிய விக்ரமசூரிய.

அமெரிக்க குடியுரிமையையும் கொண்டுள்ள இவர் அங்கு பதவியில் இருந்த காலத்தில் பணச்சலவை, நிதி மோசடி, மற்றும் குடிவரவுச் சட்டங்களை மீறியமை குறித்து அமெரிக்காவின்  கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில்  வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பணச்சலவை சட்டத்தின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளும், நிதிமோசடி தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளும், கடந்த 2018 மேமாதம் அமெரிக்கா வந்த போது குடிவரவுத் திணைக்களத்துக்கு தவறான வழங்கினார் என ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எவ்பிஐ அதிகாரிகளின் நீண்ட புலனாய்வுக்குப் பின்னர் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் இந்த வழக்கு விரைவுபடுத்தப்பட்டது.

ஆட்சிக்கவிழ்ப்பை அடுத்து, அவருக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் புதிய இராஜதந்திரப் பதவிகளைக் கொடுத்தால், இந்த வழக்கில் சிக்கல் ஏற்படும் என்றும் கருதப்பட்டதால், விரைவாக வழக்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், ஆட்சிக்கவிழ்ப்பு தோல்வியில் முடிந்த நிலையில் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான வழக்கு எந்தச் சிக்கலுமின்றி, அமெரிக்க அதிகாரிகளால்முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவர் வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்க நீதிமன்றத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொலம்பியா மாவட்ட நீதிபதி தலைமையில் அன்று காலை 10.45 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, ஜாலிய விக்ரமசூரியவுக்கு, அவர் மீதான குற்றச்சாட்டுகள் வாசித்துக் காண்பிக்கப்படும்.

இலங்கை தூதுவராகப் பணியாற்றிய ஒருவர் வெளிநாடு ஒன்றின் நீதிமன்றத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

இந்த வழக்கில் ஜாலிய விக்ரமசூரிய குறைந்த தண்டனையைப் பெற்றுக் கொள்வதற்காக, தம்முடன் ஒத்துழைப்பார் என்று அமெரிக்க அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இவர் மீதான பணச்சலவைக்  குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன்  அவர் தனது அனைத்துச் சொத்துக்களையும் இழக்க நேரிடும்.

ஜாலிய விக்ரமசூரிய சிறிலங்காவிலும், நிதிமோசடி,  வருமானத்தை மீறி சொத்துச் சேர்த்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *