ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலையில் 2016ஆம் ஆண்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 13ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டது.

அவரது நினைவு தினத்தில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக யாழ். நகரில் அமைக்கப்பட்டுள்ள தூபி முன்பாக நேற்றுக் காலை அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது தூபிக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கிழக்கு ஊடக அமையம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழு, தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் ஊடகவியலாளர் அமைப்புக்கள் பங்கேற்றன.

இதில் பெருமளவான ஊடகவியலாளர்களுடன் அரசியல் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *