ஜெனிவாத் தொடரில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை? – ஆட்டத்தை ஆரம்பித்தது பிரிட்டன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்மக்களினதும், தமிழ் அரசியல் தலைவர்களினதும் கருத்துக்களை அறிந்து கொள்ளும் முயற்சிகளில் பிரித்தானியா இறங்கியுள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கை தவறியுள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் அதற்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

2017ஆம் ஆண்டு இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், மீண்டும், ஒரு தீர்மானத்தை ஜெனிவாவில் கொண்டு வரும் முனைப்புகள் தீவிரமடைந்திருக்கின்றன.

இப்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா அங்கம் வகிக்காததால், பிரித்தானியாவின் தலைமையில் சில நாடுகள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் தமிழ் மக்கள், சிவில் சமூகம், அரசியல் தலைமைகளின் கருத்துக்களை அறிவதற்காக, உயர்மட்ட அதிகாரி ஒருவரை இலங்கைக்கு அனுப்பியுள்ளது பிரித்தானியா.

இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவரும்,

இந்தியாவுக்கான இணைப்பாளருமான பேர்கஸ் ஔல்ட், கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை, சந்தித்துப் பேசியிருந்தார்.

இதன் பின்னர் யாழ்ப்பாணம் சென்ற அவர், யாழ். மாநகர முதல்வர் இமானுவல் ஆர்னோல்ட் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இவர் மேலும் பல அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து கருத்துக்களை அறிந்து வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரக அதிகாரிகளின் துணையுடன் கருத்தறியும் முயற்சியில் பேர்கஸ் ஔல்ட் ஈடுபட்டுள்ளார்.

ஜெனிவாவில் முன்னெடுக்கப்படவுள்ள நகர்வுகளுக்கான முன்னேற்பாடாகவே இவரது சந்திப்புகள் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *