மனச்சாட்சி உள்ளவர்கள் ஆதரவை வழங்குவார்கள்! – மஹிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதில்

“புதிய அரசமைப்பின் ஊடாக மாகாண சபைகளுக்கு – மக்களின் கைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவதால் ஊழல், மோசடிகள் இடம்பெற வாய்ப்பில்லை. வளங்கள் வீண்விரயம் செய்யப்படுவதற்கான சந்தர்ப்பங்களை அது குறைத்து விடும். நாட்டின் நற்பெயர் பாதுகாக்கப்படும். நாட்டின் துரித வளர்ச்சிக்கு அது வழிசமைக்கும். எனவே, மனச்சாட்சி உள்ளவர்கள் புதிய அரசமைப்புக்கு ஆதரவு வழங்குவார்கள்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைக் கைவிடுவதற்கு நான் இணங்குகிறேன். ஆனால், நாடாளுமன்றத்தை மலினப்படுத்தி மாகாண சபைகளுக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில் தயாரிக்கப்படவுள்ள அரசமைப்பை எதிர்க்கின்றேன்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நேற்றுமுன்தினம் விசேட ஊடக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவதால் நாடு ஒன்பது துண்டுகளாகப் பிரியும் என்ற போலிப் பரப்புரையை மஹிந்த ராஜபக்சவும் அவரின் சகாக்களும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நாட்டின் மீது – மக்கள் மீது பற்று இருந்தால் போலிப் பரப்புரையை அவர்கள் உடன் கைவிட வேண்டும்.

மத்தியில் அதிகாரங்கள் குவிந்திருப்பதால் வீண் பிரச்சினைகள் எழுகின்றன. மாகாணங்களுக்கு – மக்களின் கைகளுக்கு அவர்களின் நலன் சார்ந்த அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதால் அந்த மாகாணங்கள் மட்டுமன்றி முழு நாட்டுக்கும் நன்மை ஏற்படும். நாடு நல்ல பாதையில் பயணிக்க சந்தர்ப்பம் கிடைக்கும். இதை அனைவரும் உணரவேண்டும்.

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளினதும் இயன்றளவு ஒத்துழைப்புடன் ஓர் புதிய அரசமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஒருமித்த – பிரிபடாத – பிரிக்க முடியாத நாட்டுக்குள்ளே ஒரு தீர்வைக் காணக் கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தை நாம் தவறவிடக்கூடாது.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் புதிய அரசமைப்புக்கு ஆதரவு வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *