ஒத்திவைப்புப் பிரேரணை என்றால் என்ன?

வழமையான பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பில் போதுமான கால அவகாசமும் முன்னறிவித்தலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.
எனினும், சில சூழ்நிலைகளில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை விவாதத்துக்கு எடுக்கவேண்டி இருக்கும்.

( உதாரணம், நாட்டில் விவசாயத்துக்கு தற்போது சேனா எனப்படுகின்ற படைப்புழு பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றது. இது குறித்து சபையின் கவனத்தை ஈர்க்கவேண்டும். இப்படியான விடயங்களே அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படும்.
எனவே, இந்த நோக்கங்களுக்காக நிலையியற் கட்டளைகள் ஒத்திவைப்புப் பிரேரணைகளுக்கான விவாதங்களுக்கான ஏற்பாடுகளை கொண்டுள்ளது. ( நிலையியற் கட்டளைகள் என்றால் என்னவென்பதை அடுத்து வரும் ‘நிலையியற் கட்டளைகள் என்றால் என்ன’ என்ற பதிவில் விரிவாக பார்ப்போம்.)
நிலையியற் கட்டளை 17 இன் கீழ்  ஒத்திவைப்புப் பிரேரணைகளுக்கான
செயல்முறைகள்
எம்.பியொருவர்,ஒரே நாளில் ( சபை அமர்வு நடைபெறும் தினத்தில்) ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்க வேண்டுமானால் அது குறித்து சபாநாயகருக்கு எழுத்து மூலமாக அறிவித்து, அவரின் அனுமதியைப் பெறவேண்டும்.
அனுமதி கிடைத்திருக்கும் பட்சத்தில் பாராளுமன்ற கேள்வி நேரத்துக்குப் பின்னர் அவருடைய பிரேரணையைப் பிரேரித்து சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
நாடாளுமன்றத்தின் அனுமதி வழங்கப்படாதவிடத்து, இருபதுக்குக் குறையாத உறுப்பினர்கள், யோசனையை முன்வைக்கும் எம்.பியை ஆதரித்து எழுந்து நின்றால் அதற்குரிய அனுமதி வழங்கப்படவேண்டும். அதன்பின்னர் விவாதம் ஆரம்பமாகும்.
எனினும், பிரேரிக்கப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணையை ஏற்றுக்கொள்ள சபாநாயகர் மறுப்பாரானால், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட எம்.பி, சபாநாயகரிடம் கேள்வி எழுப்பலாம். பின்னர் மறுக்கப்பட்டதற்கான காரணங்களை சபாநாயகர் தெளிவுபடுத்துவார்.
திருப்பம்
ஒத்திவைப்பு பிரேரணைகளை முன்வைக்க விரும்பும் உறுப்பினர்கள், அவர்களுடைய கட்சி பிரதிநிதிகளின்மூலமாக பாராளுமன்ற அலுவல்கள் குழுவிடம் சமர்ப்பித்து முன்னராகவே அனுமதியைப் பெற வேண்டியிருப்பது ஒரு புதிய திருப்பமாகும்.
பாராளுமன்ற அலுவல்கள் குழுவினால் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது தொடர்பான விவாதத்துக்கு ஒரு திகதி நியமிக்கப்படும். எனவே, மேற்கூறப்பட்ட நடைமுறை பின்பற்றப்படாது. தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பாலும் இம்முறைமையே பின்பற்றப்படுகின்றது.
( பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதம்கூட மேற்படி நடைமுறை பின்பற்றிதான் முன்வைக்கப்பட்டது.)
ஒத்திவைப்பு நேர பிரேரணைக்கான
விதிகளும், நடைமுறைகளும்
பாராளுமன்ற அலுவல்களுக்கான குழு, ஒத்திவைப்புப் பிரேரணைக்காக ஒத்திவைப்பு நேரத்தில் ஒரு மணித்தியாலத்தை ஒதுக்கி வைப்பதற்கு இணங்கியுள்ளது.
ஒத்திவைப்புப் பிரேரணைக்கான அறிவித்தல் வழங்க விரும்பும் உறுப்பினர் ஒருவர் அதனை எழுத்துமூலம் சபை முதல்வரின் அலுவலகம் ஊடாக அல்லது தான் சார்ந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஊடாக முதல் நாளே பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்ப வேண்டும்.
பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு முன்னறிவித்தல் கிடைக்கப்பெற்றவுடன்,  பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர்கள் துவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும்,  குறிப்பாக அதற்கு பதிலளிப்பதற்கு அவரை சபையில் பிரசன்னமாயிருக்குமாறு அறிவிப்பதற்காகவும்,
குறித்த பிரேரணைய சம்பந்தமாக அவர் போதுமான அளவு அறிந்துகொள்ள உதவுவதற்காகவும் அதனை சபை முதல்வர் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பிவைக்ககூடியதாக, அதன் பிரதியொன்று சபை தலைவரின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு ஒத்திவைப்புவேளை பிரேரணையே எடுத்துகொள்ளப்படும்.
எனினும், ஒரு பிரேரணை நீதிமன்ற விசாரணையின் கீழ் இருந்தால் அல்லது ஏற்கனவே அதே கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக இருந்தால் அதனை நிராகரிப்பதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கின்றது.
பிரேரணையை ஒருவர் முன்மொழியவேண்டும். அதை பிரிதொரு உறுப்பினர் வழிமொழிய வேண்டும். விவாதத்தின் முடிவில் சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிப்பார்.
( நேற்று பிரேரணையை அநுர முன்மொழிந்தார். திலகர் எம்.பி. அதை வழிமொழிந்தார். பெருந்தோட்டத்துறை இரா00ஜாங்க அமைச்சர், அமைச்சர் சார்பில் பதிலளித்தார்.)
விவாதத்துக்காக ஆளுங்கட்சிக்கு 30 நிமிடங்களும், எதிர்க்கட்சிக்கு 30 நிமிடங்களும் ஒதுக்கப்படும். வாக்களிப்பு எதுவும் இடம்பெறாது.
அதேவேளை, பாராளுமன்ற அலுவல்கள் குழுவின் அங்கீகாரத்துடனும் ஒத்திவைப்புப் பிரேரணைகள் எழுத்துக்கொள்ளப்படும். அத்தகைய பிரேரணைகள் அந்த குழு முடிவெடுத்துள்ள காலத்துக்கள் எடுத்து கொள்ளப்படும்.
ஒத்திவைப்புப் பிரேரணைகளின் உபயோகங்கள்!
அது தனியார் உறுப்பினர்களுக்கு, சபையின் கவனத்தை முக்கியத்துவம் வாய்ந்த பொது விடயங்களில் திருப்புவதற்கும், குறுகிய முன்னறிவித்தலில் சம்பந்தப்பட்ட அமைச்சரை உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தூண்டுவதற்கும் உதவியாக இருக்கும்.
தகவல்மூலம்- நாடாளுமன்றச் செலயகம் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *