7,500 லீற்றர் எத்தனோல் சுன்னாகத்தில் சிக்கியது!

யாழ். குடாநாட்டுக்குப் பனம் சாரயத்தைத் தருவித்து விநியோகிக்கும் – சுன்னாகம் பகுதியில் உள்ள மதுபானச்சாலை உரிமையாளர் ஒருவருக்கு எடுத்துவரப்பட்ட சுமார் 7 ஆயிரத்து 500 லீற்றர் எத்தனோல் (தூய மதுசாரம்) கைப்பற்றப்பட்டுள்ளது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னிலங்கையிலிருந்து லொறி ஒன்றில் எடுத்துவரப்பட்ட 20 லீற்றர் கொள்ளவுடைய 371 கொள்கலன்களே கைப்பற்றப்பட்டன.

அதனை எடுத்து வந்த லொறிச் சாரதி மற்றும் அவரது உதவியாளர் இருவரும் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ். குடாநாட்டுக்கு விநியோகிக்கப்படும் பனம் சாரயத்துக்கு கலப்படம் செய்வதற்காகவே இந்தப் பெரும் தொகை எத்தனோல் மதுபானச்சாலை உரிமையாளரால் எடுத்துவரப்பட்டது என்று ஆரம்ப விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு லீற்றர் எத்தனோல் சுமார் 100 சாராயப் போர்த்தல்களுக்குக் கலப்படம் செய்வதால் மதுபானச்சாலை உரிமையாளருக்குப் பல கோடி ரூபா இலாபம் கிடைப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வடக்கில் இந்தப் பெரும் தொகை எத்தனோல் மீட்கப்பட்டது இதுவே முதன்முறை என்று சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

எத்தனோல் என அழைக்கப்படும் தூய மதுசாரம் ஒரு கிளர்ச்சியை அல்லது போதையை ஏற்படுத்தும். அத்துடன், மதுசாரயத்துக்கு அடிமையாக்கும் பொருளாகவும் காணப்படும் எத்தனோல் நச்சுத் தன்மையானது.

அத்துடன், குறிப்பிட்ட அளவைவிட எத்தனோல் அதிகரித்தால் அந்த சாரயத்தைப் பருகுவோரின் உடல் நிலை மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *