கரைவாகு வடக்கு நகர சபையை உருவாக்கி தருவது இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் தலையாய கடமை – மாற்றத்துக்கான எழுச்சி முன்னணி அறிவிப்பு

பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக கரைவாகு வடக்கு நகர சபையை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச். எம். எம். ஹரீஸ் உருவாக்கித் தர வேண்டிய கடமைப் பொறுப்பை கொண்டுள்ளார் என்று மாற்றத்துக்கான எழுச்சி முன்னணியின் இயக்குனர் சட்டத்தரணி எம். ஐ. றைசுல் ஹாதி தெரிவித்தார்.

இவரின் மருதமுனை இல்லத்தில் இன்று (24) வியாழக்கிழமை  ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு பேசியவை வருமாறு,
பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக இப்பிரதேசங்களின் மக்களுக்கு தனியான உள்ளூராட்சி சபை அமைத்து தரப்பட வேண்டும். ஏனென்றால் ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைவதற்கு முன்பும், பின்பும் இப்பிரதேசங்களை உள்ளடக்கியதாக  1987 ஆம் ஆண்டு வரை தனியான உள்ளூராட்சி கட்டமைப்பாக கரைவாகு வடக்கு நகர சபை காணப்பட்டு உள்ளது. அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவருடைய அரசியல் தேவையை பிரதானமாக முன்னிறுத்தி நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்கள் முறைமையை உருவாக்கியதை தொடர்ந்து இதை நாம் இழக்க நேர்ந்தது. கல்முனை மாநகரத்தில் அன்று இருந்த நான்கு சபைகளை ஒன்றாக்கித்தான் கல்முனை நகர சபை உருவாக்கப்பட்டது. இதுவே 2002 ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்டது.
பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த புத்திஜீவிகள் காலத்துக்கு காலம் கரைவாகு வடக்கு நகர சபையை புதிதாக ஸ்தாபித்து தர வேண்டும் என்று அண்மைய பல வருடங்களாக தொடர்ந்தேச்சையாக கோரி வருகின்றனர். இதற்கான கோரிக்கைகளையும், யோசனைகளையும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு சமர்ப்பித்து வந்து உள்ளனர். சாய்ந்தமருது மக்களுக்கான தனியான பிரதேச சபை கோரிக்கை அண்மைய வருடங்களில் வலிமை அடைந்ததோடு ஒட்டியதாக கரைவாகு வடக்கு நகர சபை கோரிக்கையும் வலு பெற்றது. சாய்ந்தமருதுக்கு மாத்திரம் தனியான பிரதேச சபையை கொடுக்க முடியாது, கல்முனையை நான்கு சபைகளாக மீண்டும் பிரித்து கொடுக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு முஸ்லிம் அரசியல்வாதிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டது. இது எமக்கு ஒரு வாய்ப்பான விடயமாக கண் முன் தெரிந்தது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா இருந்தபோது கல்முனையை நான்கு சபைகளாக பிரிக்க நடவடிக்கை எடுத்தார் என்பதும் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இன்றைய உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இதற்கு முட்டுக்கட்டைகள் போட்டார் என்பதும் வரலாறு ஆகும். கடந்த கால தவறை திருத்தி கொள்ளவும், கல்முனை மாநகர மக்களின் குறிப்பாக கரைவாகு வடக்கு மக்களின் அரசியல் அபிலாஷையை நிறைவேற்றி கொடுக்கவும் ஹரீஸுக்கு இப்போது மகத்தான சந்தர்ப்பம் கிடைத்து உள்ளது. எது எப்படி இருந்தாலும் கல்முனை மாநகரத்தை நான்கு சபைகளாக பிரிக்க வேண்டும் என்கிற சிந்தனை இவரின் மனதின் அடியிலும் உள்ளது என்றே நாம் விசுவாசிக்கின்றோம்.
ஏனென்றால் சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை கோரிக்கை தீவிரம் அடைந்திருந்தபோதெல்லாம் சாய்ந்தமருதுக்கு மாத்திரம் தனியான பிரதேச சபையை கொடுக்க முடியாது, கல்முனை நான்கு சபைகளாக பிரித்து கொடுக்கப்பட வேண்டும் என்று ஹரீஸ் பேசி இருக்கின்றார். அத்துடன் கரைவாகு வடக்கு நகர சபை கோரிக்கைக்கு அவ்வப்போது புத்துயிர் கொடுத்து வந்திருக்கின்றார். கரைவாகு வடக்கு மக்களின் எழுச்சி கூட்டங்களில் இந்த நகர சபை கோரிக்கையை தூண்டி  விடுகின்ற விதத்தில் இவரின் பிரதிநிதிகள் பங்கேற்று இருக்கின்றனர். மேலும் தனியான நகர சபையை பெறுகின்ற அனைத்து தகைமைகளும் பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய கரைவாகு வடக்குக்கு இருக்கின்றன. குறிப்பாக இட பரப்பு, சன தொகை போன்றவை சம்பந்தப்பட்ட தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன. மேலும் கரைவாகு வடக்கு நகர சபை உருவாக்கி தரப்படுவதன் மூலம் கரைவாகு வடக்கில் வேலை வாய்ப்பு, திண்ம கழிவகற்றல், அபிவிருத்தி, அரசாங்க நிதி ஒதுக்கீடு போன்ற இன்னோரன்ன விடயங்கள் இலகுபடுத்தப்படுவதுடன் இப்பிரதேசங்களை சேர்ந்த மக்களின் பிரதிநிதிகளின் சிறப்பான சேவைகளை இப்பிரதேசங்களின் மக்கள் பெற கூடியதாக இருக்கும். எனவே கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் என்கிற வகையிலும், காலத்தின் தேவையை அனுசரித்தும் இந்த இராஜாங்க அமைச்சர் பதவி காலத்துக்குள் கரைவாகு வடக்கு நகர சபையை ஹரீஸ் கட்டாயம் உருவாக்கி தர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *