கம்பனிகளிடமிருந்து பெருந்தோட்டங்களை கவீகரி! அரசை வலியுறுத்துகிறார் வேலுகுமார் எம்.பி.!!

சம்பள உயர்வை தரமறுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து நிலங்களை பறித்து, அவற்றை தோட்டத்தொழிலாளர்களுக்கு பங்கிட்டு வழங்கி,  அவர்களை  சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களாக்கவேண்டும்.
அப்போதுதான் தோட்டத்தொழிலாளுக்கு  சுதந்திரமாக  வாழக்கூடிய உரிமை கிடைக்கும்.
இந்நிலை உருவாவதற்கு  அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்- என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமார் கோரிக்கை விடுத்தார்.

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,
”  பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் வரலாறு மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் இதற்கு முன்னரும் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி.,  புள்ளிவிபரங்களுடன் இச்சபையில் உரையாற்றியிருந்தார்.
அது தொடர்பில் தேசிய பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. மலையக மக்களின் பிரச்சினைகள் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனினும்,  ஒருவருடம் கடந்துள்ள போதிலும் அன்று சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை தேடிவதற்குரிய ஆரம்பக்கட்ட பொறிமுறைகூட வகுக்கப்படவில்லை.
இந்நிலையில் மீண்டுமொரு சபைஒத்திவைப்புவேளை பிரேரணையை முன்வைத்து எம்மக்களின் பிரச்சினைகளை அநுரகுமார திஸாநாயக்க பட்டியலிட்டுக்காட்டி பேசியுள்ளார். இதற்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனவே, இனியாவது பேச்சளவில் மட்டும் நின்றுவிடாது செயல்வடிவம் கொடுப்பதற்குரிய பொறிமுறையை நாம் இச்சபையின் ஊடாக இனம்காணவேண்டும்.
அதை எவ்வாறு வெற்றிகரமாக செயற்படுத்துவது என்பது குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சி மட்டத்தில் கலந்துரையாடப்படவேண்டும்.
பொருளாதார ரீதியிலான பிரச்சினை (வறுமை) காரணமாகத்தான் தென்னிந்தியாவிலிருந்து எம்மக்கள் அன்று இலங்கைநோக்கி வந்தனர். இன்றும் அதே பிரச்சினை நீடிக்கின்றது. சம்பள உயர்வுக்காக எமது மக்கள் போராடிவருகின்றனர்.
தோட்டத்தொழிலாளர்களின் சம்பளமானது கூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தையின் ஊடாகவே நிர்ணயிக்கப்படுகின்றது. இந்த படிமுறையானது தோல்விக்கண்ட பொறிமுறையாக இன்று மாறியுள்ளது.
இது தொடர்பிலேயே தொழிலாளர்களும், இளைஞர்களும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர் என்பதுடன், சம்பள உயர்வுகோரி வீதிக்கு இறங்கியுள்ளனர்.
அதேவேளை, சம்பள விடயத்தில்  நட்டத்தை  காரணம் காட்டி கம்பனிகள் நழுவுகின்றன. பெருந்தோட்டங்களை கம்பனிகளால் கொண்டுநடத்த முடியாவிட்டால் அவற்றை அரசாங்கம் பொறுப்பேற்று, சிறுதேயிலைத் தோட்ட உற்பத்தி முறைமையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
 இவ்வாறு செய்வதன்மூலம் நாட்கூலி என்ற நாமத்திலிருந்து வெளியேவந்து, எம்மக்களுக்கும் சிறுதோட்ட உரிமையாளராகமாறும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
இவ்வாறு தீர்வு கைக்கு எட்டிய தூரத்தில் இருந்தாலும் கம்பனிகளைப் பாதுகாப்பதற்கே அரசாங்கமும், துறைசார் அமைச்சர்களும் முற்படுவதை காணக்கூடியதாகவுள்ளது. எனவே, கம்பனிகளிடம் , ஒரு இனத்தை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் விளையாட்டில் அரசாங்கம் ஈடுபடக்கூடாது.

எனவே, பெருந்தோட்டத்தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும் என்ற  யோசனையை நான் இச்சபையில் முன்வைக்கின்றேன்.

கூட்டு ஒப்பந்த பேச்சு என்ற போர்வையில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக எம் மக்களை முடக்கி, ஒரு மூலையில் வைத்திருந்த தொழிற்சங்கங்கள், இன்று முழு சமூகத்தையும் வீதிக்கு தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன.

எனவே, சமூகத்துக்கு தாம் இழைத்துள்ள தவறை இப்போதாவது புரிந்துகொண்டு, தோட்டக்கம்பனிகளை சுவீகரிக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.தோட்டத்தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படவேண்டும்.

இதை அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தவேண்டும். அப்போதுதான் எம்மக்களுக்கு விடிவு பிறக்கும். ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய எமக்கும் அது சன்மானமாக அமையும்.

மாறாக அரசாங்கம் இழுத்தடிப்பு செய்து புறக்கணிக்குமானால் மாற்று நடவடிக்கையில் இறங்கவேண்டிய நிலை ஏற்படும்.” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *